எடப்பாடி சொன்னதைக் கேட்டதும் கோபத்துடன் வெளியேறினார் பியூஷ் கோயல். இதையடுத்து அமித்ஷா எடுக்கப்போகும் முடிவு இதுதான் என்று அதிரவைக்கிறார் அதிமுக முன்னாள் நிர்வாகி பெங்களூரு புகழேந்தி.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலாபேலஸ் நட்சத்திர ஓட்டலில் நேற்று அதிமுக – பாஜக இடையே தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடந்தது.
அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி , கே.பி.முனுசாமி உள்ளிட்டோரும், பாஜக தரப்பில் பியூஷ் கோயல், எல். முருகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

பாஜகவுக்கு 75 தொகுதிகள் கேட்டிருக்கிறார் பியூஷ் கோயல். ஆனால் எடப்பாடியோ, அதிமுகவுக்கு 170 சீட், பாஜகவுக்கு 23 சீட், பாமகவுக்கு 23 சீட், தேமுதிகவுக்கு 6 சீட், அமமுகவுக்கு 6 சீட், ஓபிஎஸ்க்கு 3 சீட் தமாகா இணைந்தால் அக்கட்சிக்கு 3 சீட் ஒதுக்குவது என்கிற முடிவையும் தெரிவித்திருக்கிறார்.
இதில் அதிருப்தி அடைந்த பியூஷ் கோயல் கோபத்துடன் வெளியேறியதாகச் சொல்கிறார் அதிமுக முன்னாள் நிர்வாகி பெங்களூரு புகழேந்தி.
இந்த தொகுதிப்பங்கீட்டில் அடுத்து நடக்கப்போவது குறித்து அவர், ’’அதிமுகவின் 85 சதவிகித கதையை பாஜக முடித்துவிட்டது. மீதி கதையையும் முடித்துவிடும். பாஜகவை பொறுத்தவரையிலும் கேட்டுப்பெறுகின்ற நிலையில் இல்லை. பிடுங்கிக்கொள்கிற நிலையில்தான் இருக்கிறது. 75 சீட்டில் பாஜக உறுதியாக நிற்கிறது. அமித்ஷா வந்துமிரட்டி கையெழுத்து போடச்சொல்லப்போகிறார். எடப்பாடியும் 75 சீட் என்று கையெழுத்து போடப்போகிறார்’’ என்கிறார்.
மேலும், ‘’234 தொகுதிகளிலும் டெபாசிட் போகப்போகுது. இதுக்கு ஏன் அதிமுக – பாஜகவுக்குள் சண்டை’’ என்று சிரிக்கிறார்.
