இந்தியாவில் சிறுபான்மை மத மக்களின் பாதுகாப்பு குறித்த சந்தேகத்தை அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள் ஒபாமாவும் பைடனும் தெரிவித்தபோது, நம் நாட்டின் மீது அமெரிக்கா அவதூறு தெரிவிப்பதாக இந்திய ஆட்சியாளர்கள் தெரிவித்தனர். இந்திய குடிமக்களாகிய நமக்கும், அமெரிக்கா ஏன் இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அவர்களின் அன்றைய சந்தேகக் கேள்வி என்பது, இந்தியாவின் ஒருமைப்பாட்டை விரும்பக்கூடிய குடிமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய எச்சரிக்கை என்பதை அண்மைக்கால நிகழ்வுகள் வெளிப்படையாகத் தெரிவிக்கின்றன.
முஸ்லிம் வழிபாட்டுத் தலங்கள், பள்ளிவாசல்கள் உள்ள இடங்களில் இந்து கோயிலை இடித்துத்தான் அதைக் கட்டியிருக்கிறார்கள் என்கிற சர்ச்சையை கிளப்பி வருகிறது பா.ஜ.க.வின் பரிவாரங்கள். திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையின் மேலே உள்ள சிக்கந்தர் தர்காவை குறிவைத்து சர்ச்சையைக் கிளப்புகிறது இந்த கும்பல். முஸ்லிம்களைத் தொடர்ந்து சிறுபான்மை கிறிஸ்தவர்களையும் குறி வைக்கத் தொடங்கிவிட்டனர்.
ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்குப் பிறகு, உலகம் முழுவதும் அதிகமாகக் கொண்டாடப்படுவது கிறிஸ்துமஸ் திருநாள் (Christmas). இயேசு பிறந்த நாளாகக் கருதப்படும் டிசம்பர் 25ஆம் நாள் உலகத்தின் பல நாடுகள் போலவே, இந்தியாவிலும் தேவாலயங்களில் பிரார்த்தனைகள், வாணவேடிக்கை, புத்தாடை, கேக், கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து கோலாகலம் என்று கொண்டாடப்படுவது வழக்கம். இனி, இந்தியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை அதுபோலக் கொண்டாட முடியாது என்ற அச்ச உணர்வை கிறிஸ்துவ சிறுபான்மை மக்களின் மனதில் விதைத்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் வளர்த்தெடுக்கப்பட்ட இந்துத்வா கும்பல்.
சாலையோரக் கடை போட்டு கிறிஸ்துமஸ் தொப்பியை விற்றுக்கொண்டிருந்த ஒரு சிறுவனை, வடமாநிலம் ஒன்றில் காரில் வந்த இந்துத்வா கும்பல் மிரட்டுகிறது. “இது இந்துராஷ்ட்ரா.. இங்கே கிறிஸ்துமஸ் கொண்டாடக்கூடாது’‘ என்று சொல்லி, அந்த சிறுவனுடைய கடையை காலி செய்யச் சொல்லி கொலை மிரட்டல் விடுக்கிறது. சட்டீஸ்கரின் ராய்ப்பூர் நகரில் உள்ள ஒரு தேவாலயத்தின் முன் கிறிஸ்துமஸ்க்காக அலங்கரிக்கப்பட்டிருந்த மரம், கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மை ஆகியவற்றை ஒரு கும்பல் உடைத்துத் தள்ளுகிறது. மத்திய பிரதேசத்தில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் இருந்த மாற்றுத் திறனாளி பெண் ஒருவரை இந்துத்வா கும்பலைச் சேர்ந்த ஒரு பெண் அடித்து தாக்கும் காட்சி, பார்த்த அனைவரையும் பதைபதைக்க வைத்தது. கிறிஸ்துவ மிஷனரிகள் நடத்தும் பள்ளிகள்-பிற பள்ளிகள் ஆகியவற்றில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து ரகளை செய்துள்ளது இந்த கும்பல். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு எதிராக நடந்த இந்த வன்முறைகள் அனைத்தும் பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் அரங்கேறியுள்ளன.
ஆர்.எஸ்.எஸ். விரும்புவதை பா.ஜ.க. செயல்படுத்தும். ஆனால், ஆர்.எஸ்.எஸ். தனக்கும் பா.ஜ.க.வுக்கும் தொடர்பில்லை என்பது போல காட்டிக்கொள்ளும். இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே கூட ஆர்.எஸ்.எஸ். இல்லை என்பார்கள். ஆனால், வன்முறைகளே அவர்களின் வழிமுறையாக இருக்கும். அதைச் செய்வதற்காகவே பஜ்ரங்தள், அனுமான் சேனை உள்ளிட்ட பல்வேறு மதவெறி அமைப்புகளை உருவாக்கி வைத்திருப்பார்கள். ஒடிசாவில் 20 ஆண்டுகளுக்கு எரித்துக் கொல்லப்பட்ட ஸ்டேன்ஸ் பாதிரியார் மற்றும் அவரது பிள்ளைகள் மீதான கொடூரத் தாக்குதல் தொடங்கி, தற்போது நடைபெற்றுள்ள கிறிஸ்துமஸ் வன்முறைகள் வரை அனைத்திலும் பஜ்ரங்தள் அமைப்பின் பங்களிப்பே அதிகம்.
இந்தியாவில் மூன்றாவது முறையாக மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெறுவதால், பா.ஜ.க .ஆட்சி நடைபெறாத மாநிலங்களிலும்கூட ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்து மதவாத அமைப்புகளின் வெறியாட்டம் அதிகரித்துள்ளது. முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் கணிசமான அளவில் உள்ள மாநிலங்களில் ஒன்று, கேரளா (Kerala). அங்கு சில மாவட்டங்களில் கிறிஸ்தவர்கள் அதிகளவில் இருப்பார்கள். அப்படிப்பட்ட மாநிலத்திலேயே ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்ட இந்து மதவாத அமைப்புகள் பல பள்ளிகளில் கிறிஸ்துமஸ் திருவிழாக் கொண்டாடுவதை எதிர்த்து மிரட்டல் விடுத்ததால், அந்தப் பள்ளிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கைவிடப்பட்டதை கேரள மாநில முதல்வர் பினரயி விஜயன் வேதனையோடு தெரிவித்திருக்கிறார்.
நாடு முழுவதும் இப்படிப்பட்ட பதற்றம் நிலவுகிற நிலையில், தமிழ்நாட்டில் முதல்வர் தொடங்கி பல்வேறு கட்சித்தலைவர்களும் கிறிஸ்துமஸ் விழாக்களில் பங்கேற்று மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தியிருப்பது ஆறுதலையும் நிம்மதியையும் மட்டுமின்றி, நம்பிக்கையையும் தருகிறது. ஓர் ஊரில் கிறிஸ்துமஸ் விழாவின் போது, சபரிமலை ஐயப்பன் பாடலை ஒலிக்கச் செய்து அதற்கு கிறிஸ்துமஸ் தாத்தா உள்ளிட்ட பலரும் நடனம் ஆடியது இதுதான் தமிழ்நாடு என்பதை இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு உரக்கச் சொல்வதாக அமைந்துள்ளது.
எனினும், ஒவ்வொரு மாநிலத்திலும் மதவெறியை விதைத்து வரும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. மற்றும் அதன் பரிவாரங்களின் அத்துமீறிய செயல்பாடுகளால் தமிழ்நாடு (Tamilnadu) எத்தனை காலத்திற்கு இதே பண்பாட்டோடு இருக்கும் என்ற கேள்வியும் அச்சமும் எழுகிறது.
