தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் தொகுதிப்பங்கீட்டில் அவசரம் காட்டியது பாஜக. இதற்காக கடந்த 23.12.2025 அன்று பாஜக தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வந்தார்.
தமிழக பாஜக பிரமுகர்களுடன் கமலாலயத்தில் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலாபேலஸ் நட்சத்திர ஓட்டலில் அதிமுகவுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையில் பாஜக மற்றும் பாமக, தேமுதிக, அமமுக, தமாகா, ஓபிஎஸ் அணிக்கு சேர்த்து 75 தொகுதிகள் கேட்டிருக்கிறார் பியூஷ் கோயல். அதாவது அதிமுக 160 தொகுதிகளில் போட்டியிடலாம் என்று ஆலோசனை வழங்கி இருக்கிறார்.
எடப்பாடி இதை ஏற்காமல், அதிமுகவுக்கு 170 சீட், பாஜகவுக்கு 23 சீட், பாமகவுக்கு 23 சீட், தேமுதிகவுக்கு 6 சீட், அமமுகவுக்கு 6 சீட், ஓபிஎஸ்க்கு 3 சீட் , தமாகாவுக்கு 3 சீட் என்ற கணக்கை சொல்லி இருக்கிறார். இதில் அதிருப்தி அடைந்த பியூஷ் கோயல் கோபத்துடன் வெளியேறியிருக்கிறார்.

தொகுதிப்பங்கீட்டில் உடன்பாடு எட்டாமல் போனதால் ஓபிஎஸ் அணியும் பல குழப்பங்களை விளைவித்திருக்கிறது. அமமுகவும் எதிர்ப்புகள் தெரிவித்திருக்கிறது. தேமுதிகவும் தங்களை கேட்காமல் இவர்களாகவே எப்படி 6 சீட் கணக்கு சொல்லலாம் என்று வெகுண்டெழுந்திருக்கிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் எழுந்திருக்கும் இந்த சிக்கல் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
இது குறித்து அதிமுக முன்னாள் எம்.பி., ‘’கூட்டணி பேச்சுவார்த்தையில் எடப்பாடி பழனிசாமி 160 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும், மீதமுள்ள 75 தொகுதிகளில் ஓ.பி.எஸ், தினகரன், பா.ம.க, தே.மு.தி.க மற்றும் பாஜக உட்பட கூட்டணி கட்சிகளுக்கு கலந்து ஆலோசித்து பிரித்து வழங்கப்படும் என்று அறிவித்திருந்தால், இவ்வளவு பெரிய விமர்சனங்களும் எதிர்மறை விளைவுகளும் ஏற்பட்டிருக்காது’’ என்கிறார்.

அவர் மேலும், ‘’ தன்னுடைய தவறான அணுகுமுறையால் எப்படி “பிள்ளையார் சுழி போட்டுவிட்டார்கள்” என்று கூறி விஜய் கூட்டணிக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பை அவரே உண்டாக்கி அதில் ஒரு சோர்வை உண்டாக்கினாரோ அதேபோல, தான் என்கிற அகம்பாவத்தாலும் தவறான அணுகுமுறையாலும் ஒரு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிட்டார் எட்பாடி’’ என்கிறார்.
