கடந்த 2012ஆம் ஆண்டு உலகம் அழியும் என சொல்லப்பட்ட கதையை தொடர்ந்து உலகில் உள்ள பல்வேறு தீர்க்கதரிசிகள் என சொல்லப்படும் நபர்கள், ஒவ்வொரு முறையும் உலகம் அழியப்போகிறது என்ற கதையை ஒவ்வொரு வருடமும் சொல்லிக்கொண்டுதான் வருகின்றனர்.
எபோ நோவா யார்?
அந்த வகையில், கானாவைச் சேர்ந்த எபோ நோவா (Ebo Nova) என்ற நபர், சமீப காலமாக தன்னை ஒரு “தீர்க்கதரிசி” (Prophet) என அறிவித்துக் கொண்டு பல்வேறு பரபரப்பான கருத்துகளை வெளியிட்டு வந்துள்ளார். தொடர்ந்து, சமூக ஊடகங்கள், ஆன்மீக கூட்டங்கள் மற்றும் நேரலை உரைகளின் மூலம் அவர் பெரும் எண்ணிக்கையிலான மக்களைச் சென்றடைந்தார். குறிப்பாக, அவரது பேச்சுகள் பெரும்பாலும் பயத்தை ஏற்படுத்தும் வகையிலும், உலக அழிவை முன்னறிவிப்பதாகவும் அமைந்திருந்தன.
“உலகம் அழியப்போகிறது”
தொடர்ந்து, எபோ நோவாவின் முக்கியமான மற்றும் சர்ச்சைக்குரிய கூற்று, “உலகம் முழுவதும் விரைவில் பெரும் வெள்ளப்பெருக்கால் தண்ணீரில் மூழ்கும்” என்பதாகும். இது கடவுளிடமிருந்து தனக்கு நேரடியாக கிடைத்த செய்தி எனவும், அழிவுக்குப் பின் பூமியில் மீண்டும் மக்களை குடியமர்த்த பைபிளில் வருவது போல 8 நோவா பேழைகளை கட்ட கடவுள் தன்னை பணியமர்த்தியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த கூற்று, உலக மக்களிடையே பெரும் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

பயத்தை பயன்படுத்தி பண வசூல்
மேலும் அவர், உலகம் நீருக்குள் மூழ்கியதும் தான் கட்டப்போகும் கப்பலில் என்னுடன் வருபவர்கள் மட்டும் தப்பி உயிர் பிழைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.இதைக் கேட்டு நம்பிய பலரும் தங்கள் சொத்துகளை விற்று அவருக்கு கப்பல் கட்ட பணத்தை அனுப்பி வந்துள்ளனர். மேலும், நைஜீரியா (Nigeria), கேமரூன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கானோர் தங்கள் சொத்துக்களை விற்றுவிட்டு, கானாவில் உள்ள அந்தப் பேழை பகுதிக்குக் குடிபெயர்ந்தனர்.
பாதிக்கப்பட்ட மக்களின் இழப்பும் ஏமாற்றமும்
ஆனால் டிசம்பர் 25 அன்று அவர் கணித்தபடி வெள்ளம் ஏற்படாததைத் தொடர்ந்து, உலகம் அழிவதை முன்னிட்டு தீக்கத்தரிசி எபோ நோவா கடவுளிடம் தொடர்ந்து பிராத்தனை செய்ததாகவும், அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக்கொண்ட கடவுள், தற்போது உலகம் அழிவதை தள்ளிப்போட்டுள்ளார் என்றும் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பாதுகாப்பிற்காகத் தங்கள் வாழ்வாதாரத்தை விட்டுவிட்டு வந்த அந்த மக்கள், தற்போது எபோ நோவாவின் பேழை அமைந்துள்ள இடத்திலேயே தங்கியுள்ளனர்.

இந்தச் சம்பவம் சர்வதேச ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மத நம்பிக்கையைப் பயன்படுத்தி மக்களை எபோ நோவா ஏமாற்றுவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் தனது ஆதரவாளர்கள் கொடுத்த பணத்தில் அவர் விலையுயர்ந்த பென்ஸ் வாங்கியுள்ளதாகவும் விமர்சிக்கப்படுகிறது.தற்போது அந்தப் பேழை அமைந்துள்ள பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் தற்காலிகக் கூடாரங்களில் தங்கியுள்ளனர்.
அறிவியல் நிபுணர்களின் விளக்கம்
சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் நிபுணர்கள், “உலகம் முழுவதும் திடீரென தண்ணீரில் மூழ்கும்” என்ற கூற்றிற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளனர். இயற்கை பேரழிவுகள் பற்றிய தகவல்களை அறிவியல் அடிப்படையில் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், பொய்யான தீர்க்கதரிசனங்களை நம்பக்கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
சட்ட நடவடிக்கை தேவை என்ற கோரிக்கை
இந்த மோசடி தொடர்பாக உரிய அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன. மேலும் எபோ நோவா விவகாரம், ஆன்மீகம் என்ற பெயரில் நடைபெறும் மோசடிகளை தடுக்க கடுமையான சட்டங்கள் அவசியம் என்பதையும், பயத்தையும் நம்பிக்கையையும் பயன்படுத்தி எவ்வாறு மக்களை ஏமாற்ற முடியும் என்பதற்கான ஒரு எச்சரிக்கை உதாரணமாக உள்ளது. மேலும், பொதுமக்கள் எந்தவொரு அச்சமூட்டும் தகவலையும் உடனே நம்பாமல், சிந்தித்து, ஆதாரங்களை சரிபார்த்து செயல்பட வேண்டியது மிக அவசியம் என்பதை இவை உணர்த்துகிறது.
