2024–2025 காலகட்டத்தில் இந்தியாவில் கிறிஸ்தவர்களை இலக்காகக் கொண்டு வன்முறை சம்பவங்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் மத மோதல்கள் அதிகரித்து வருகின்றன. யுனைடெட் கிறிஸ்டியன் ஃபோரம் மற்றும் பிற மனித உரிமை அமைப்புகள் இந்தக் காலத்தில் இந்தியாவின் பல மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மற்றும் தேவாலயங்கள் மீது ஆயிரக்கணக்கான தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வழங்குகின்றன.
சத்தீஸ்கர்: அடக்கம் விவகாரம் மற்றும் தேவாலய தாக்குதல்கள்
சத்தீஸ்கர் காங்கேர் மாவட்டத்தின் ‘படே தெவ்தா’ கிராமத்தில், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஒருவரின் உடலை அடக்கம் செய்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக டிசம்பர் 18, 2025 அன்று வன்முறை வெடித்தது. தொடர்ந்து, இந்த மோதலில் ஒரு கிறிஸ்தவரின் வீடு மற்றும் ஒரு பிரார்த்தனை கூடம் தீவைத்துக் கொளுத்தப்பட்டதுடன், 20-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்தனர். இதேபோல், டிசம்பர் 24, 2025 அன்று, சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள ‘மெக்னடோ மால்’ (Magneto Mall) என்ற வணிக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் அலங்காரங்களை 80 முதல் 90 பேர் கொண்ட கும்பல் அடித்து நொறுக்கியது.
உத்தரப் பிரதேசம்: அதிகமான தாக்குதல்கள் மற்றும் மிரட்டல்கள்
யுனைடெட் கிறிஸ்டியன் ஃபோரம் (UCF) தரவுகளின்படி, 2025 நவம்பர் வரை இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராகப் பதிவான 706 வன்முறைச் சம்பவங்களில், அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் (Uttar Pradesh) மட்டும் 184 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, டிசம்பர் மாத கிறிஸ்துமஸ் காலங்களில், பரேலியில் தேவாலயங்களுக்கு வெளியே ஹனுமான் சாலிசா வாசிப்பது, லக்னோவில் பிரார்த்தனை கூட்டங்களை சீர்குலைப்பது மற்றும் தேவாலயங்களைச் சேதப்படுத்துவது போன்ற நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. அம்மாநிலத்தின் கடுமையான மதமாற்றத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி, 2025 ஆகஸ்ட் மாதம் வரை குறைந்தது 12 போதகர்கள் பொய்யான மதமாற்றக் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரும்பாலான சம்பவங்களில், வன்முறையில் ஈடுபடும் கும்பல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் மீதே காவல்துறை வழக்குப் பதிவு செய்வதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
மத்தியப் பிரதேசம்: தேவாலயங்களில் இடையூறுகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள்
மத்தியப் பிரதேசத்தில் (Madhya Pradesh) குறிப்பாக ஜபல்பூரில், டிசம்பர் 20 அன்று தேவாலயத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது, பாரதிய ஜனதா கட்சியின் (BJP) மாவட்ட துணைத் தலைவர் அஞ்சு பார்கவா, பார்வையற்ற பெண் ஒருவரைத் தாக்கி அவமதித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 22 அன்று ஜபல்பூரின் சக்தி நகர் பகுதியில் நடைபெற்ற கத்தோலிக்க பிரார்த்தனை கூட்டம் ஒன்றையும் ஒரு கும்பல் மதமாற்றம் நடப்பதாகக் கூறி தடுத்து நிறுத்தியது.மேலும், ஜாபுவா போன்ற பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் கரோல் பாடல்கள் பாடுவதற்குத் தடைகள் விதிக்கப்பட்டு, பின்னர் நீதிமன்றத் தலையீட்டிற்குப் பிறகே அனுமதி வழங்கப்பட்டது. இந்தத் தாக்குதல்களை இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை (CBCI) கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், கிறிஸ்தவ சமூகத்திற்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
அசாம்: தனிப்பட்ட தாக்குதல்கள்
அசாம் (Assam) மாநிலம் நல்பாரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ சமூகத்தினர் மீது வன்முறைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. குறிப்பாக, பனிகான் பகுதியில் அமைந்துள்ள செயின்ட் மேரிஸ் ஆங்கிலப் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல், அங்கிருந்த கிறிஸ்துமஸ் குடில், அலங்காரப் பொருட்கள் மற்றும் பேனர்களைச் சேதப்படுத்தி தீயிட்டுக் கொளுத்தியது. இதனைத் தொடர்ந்து, நல்பாரி நகரில் உள்ள கடைகளில் விற்கப்பட்ட கிறிஸ்துமஸ் தொப்பிகள் மற்றும் பரிசுப் பொருட்களும் அந்த கும்பலால் எரிக்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் அமைப்புகளைச் சேர்ந்த நால்வரை அசாம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு அசாம் கிறிஸ்தவ கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா உறுதியளித்துள்ளார்.
டெல்லி: பண்டிகைக் கால அச்சுறுத்தல்கள்
டெல்லியில் லஜ்பத் நகர் மற்றும் ஈஸ்ட் ஆஃப் கைலாஷ் போன்ற பகுதிகளில், சாண்டா தொப்பிகளை அணிந்திருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை பஜ்ரங் தளம் அமைப்பினர் தடுத்து நிறுத்தி அச்சுறுத்தியதுடன், இது இந்து கலாசாரத்திற்கு எதிரானது என்றும் வாதிட்டனர். முன்னதாக, தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டுக் கூட்டங்கள் மீது அதிகரித்து வரும் தாக்குதல்களைக் கண்டித்து, ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் திரண்டு போராட்டம் நடத்தினர்.
ஒடிசா: கூட்ட வன்முறை மற்றும் சமூக புறக்கணிப்பு
ஒடிசாவின் தெற்கு மாவட்டங்களில் குறிப்பாகப் பழங்குடியினர் வாழும் பகுதிகளில், கிறிஸ்தவ சமூகத்தினருக்கு எதிரான தொடர்ச்சியான தாக்குதல்கள் மற்றும் துன்புறுத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஜூன் 2025 இல் மல்காங்கிரி மாவட்டத்தில் ஒரு பெரும் கும்பல் கிறிஸ்தவ கிராமத்தின் மீது நடத்திய தாக்குதலில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதேபோன்ற தாக்குதல்கள் கோராபுட் பகுதியிலும் நிகழ்ந்தன. சமீபத்தில் 2025 கிறிஸ்துமஸ் காலத்தின் போது, சம்பல்பூரில் தொழிலாளர்கள் மீதான உயிரிழப்புடன் கூடிய தாக்குதலும், புவனேசுவரத்தில் வியாபாரிகள் மிரட்டப்பட்ட சம்பவங்களும் பதற்றத்தை அதிகரித்தன.
கேரளா: கரோல் பாடிய சிறுவர்கள் மீது தாக்குதல்
அண்மையில் கேரளாவில் கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தில் கிறிஸ்தவ சமூகத்தினர் மீது சில வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, பாலக்காடு மாவட்டம் புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் கரோல் பாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அஷ்வின் ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல், ஆலப்புழை மாவட்டம் நூரநாடு பகுதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் காயமடைந்தனர். இச்சம்பவங்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள், மத நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவங்கள் இந்திய அரசியலமைப்பு வழங்கிய மத சுதந்திரத்திற்கு நேரடி எதிர்ப்பாகும். மேலும், கிறிஸ்தவ அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் சில அரசியல் தலைவர்கள் இந்த தாக்குதல்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
