ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் என்று அதிமுக இரட்டைத்தலைமையில் இயங்கி வந்ததை விரும்பாத எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வத்தை வெளியேற்றிவிட்டு தான் பொதுச்செயலாளராகி அதிமுக மீண்டும் ஒற்றைத்தலைமக்கு கொண்டு வந்தார்.
அதுவரையிலும் அதிகாரப்பூர்வ அதிமுக எது? என்று கேட்கும் அளவுக்கு பன்னீர்செல்வமும் பழனிசாமியும் ஆளுக்கொரு அறிக்கையும் அறிவிப்பும் வெளியிட்டு வந்தார்கள். இவர் ஒருவரை நீக்கினால் அவர் ஒருவரை நீக்குவார். அதிமுகவில் இருந்து வந்த இந்த போட்டா போட்டி அரசியல் இப்போது பாமகவில் நீடித்துக்கொண்டே போகிறது.

அதிகாரப்பூர்வ பாமக எது? என்கிற போட்டா போட்டியில் உள்ளனர் ராமதாசும், அன்புமணியும். ராமதாஸ் ஒருவரை நீக்கினால், அதற்கு அந்த அதிகாரம் அவருக்கு இல்லை. நான் தான் தலைவர் என்று சொல்கிறார் அன்புமணி. இவர் ஒருவரை நீக்கினாலோ நியமனம் செய்தாலோ அந்த அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என்கிறது ராமதாஸ் தரப்பு. நீதிமன்றம் , தேர்தல் ஆணையம் சென்றும் கூட இன்னும் இந்த வழக்கு முடிவுக்கு வரவில்லை.
இந்நிலையில்தான் இன்று பாமகவில் தலைவராக இருந்து அன்புமணிக்காக அந்த நாற்காலியை விட்டுக்கொடுத்த ஜி.கே.மணியை கட்சியை விட்டு நீக்கிவிட்டதாக அறிவித்துள்ளார் அன்புமணி. உடனே ஜி.கே.மணி, கட்சியில் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது அன்புமணி. அவரை தலைவர் ராமதாஸ் நீக்கிவிட்டார். அப்படி இருக்கும் போது அவர் எப்படி என்னை நீக்க முடியும் என்று கேட்கிறார்.
தேர்தல் நெருக்கத்திலும் கூட இந்த பஞ்சாயத்து முடிவுக்கு வராது போலிருக்கிறது.
