அரசியல் கட்சி தொடங்கிவிட்டாலும் கூட விஜயை ஏன் அரசியல்வாதிகாக பார்க்கவில்லை என்பது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்தார் சரத்குமார்.
’’தனது கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை தெளிவாக சொல்லவில்லை விஜய். தேர்தலையும் சந்திக்கவில்லை. தனிநபர் தாக்குதலை முன்னெடுப்பதிலேயே அவர் நேரத்தை செலவிடுகிறார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர்தான் தவெக நிரந்தரமான கட்சியா? விஜய் கட்சியை தொடர்ந்து நடத்துவாரா? மாட்டாரா? என்பது தெரியவரும்’’ என்று தெரிவித்தார்.

தூத்துக்குடியில் தவெக நிர்வாகி அஜிதா ஆக்னல், தனக்கு மாவட்ட பொறுப்பு வேண்டி தனது ஆதரவாளர்களுடன் பனையூர் தவெக அலுவலகத்தை முற்றுகையிட முயன்றார். தவெகவின் பெண் மற்றும் ஆண் பவுன்சர்கள் இவர்களை தடுத்து நிறுத்திவிட்டனர்.
பல மணி நேர காத்திருப்புக்கு பின்னர் விஜய் வந்தபோது அவரது காரையும் வழிமறித்தனர். ஆனால், அவர்களை இடித்து தள்ளி விட்டு கார் சென்றுவிட்டது. இது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் அஜித்தா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘’அது உட்கட்சி பிரச்சனையாக இருக்கலாம். ஆனால் ஒரு பெண் காரை நிறுத்துகிறார் என்கிறபோது மனிதாபிமான அடிப்படையில் காரை நிறுத்தி பேசி இருக்கலாம். அப்போது ஒன்றும் பாதுகாப்பு இன்மை இல்லை. டேஞ்சரான சூழ்நிலையும் இல்லை.
காரில் இருந்து இறங்கி ஏன்? என்று கேட்பவர்தான் கதாநாயகனாக இருக்க முடியும். இதைச்செய்யாததால் தர்ணா செய்து தற்கொலைக்காக தூக்க மாத்திரைகள் சாப்பிட்டிருக்கிறார் அஜித்தா. விஜய் காரில் இருந்து இறங்கி பேசி இருந்தால் இந்த நிலைக்கு தள்ளாமல் இருந்திருக்கலாம்’’என்றார் சரத்குமார்.
