தமிழக வெற்றிக்கழகத்தில் 20 மாவட்டச் செயலாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். கட்சியின் உயர் மட்டத்தில் இருக்கும் பணம் பறிக்கும் கும்பலின் அட்டூழியத்தை சகிக்க முடியாமல் மனக்குமுறலில் இருக்கும் அவர்கள் இன்னும் சில தினங்களில் திமுகவில் இணையவிருகிறார்கள்.
என்ன நடந்தது?
தவெகவில் பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். பெண்களுக்கு அங்கே உரிய மரியாதை இல்லை என்று தேனி, கோவை மாவட்ட தவெக பெண் நிர்வாகிகள் குமுறினர். இப்போது தூத்துக்குடி மாவட்ட தவெக பெண் நிர்வாகி அஜித்தா ஆக்னல் தற்கொலை முயற்சிக்கும் தள்ளப்பட்டிருக்கிறார்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த வைஷ்ணவி தவெகவில் ரொம்பவே ஆக்டிவ்வாக இருந்து வந்தார். ஒரு கட்டத்தில் தவெகவை வெறுத்து திமுகவில் இணைந்தார். அது குறித்து அவர், ‘’தவெகவில் பெண்கள் செல்வாக்கு பெறுவதை தவெக நிர்வாகிகள் விரும்புவதில்லை. தேனி மாவட்டத்தைப் போல பல மாவட்டங்களில் இந்தப் பிரச்சனை இருக்கிறது. மாவட்ட நிர்வாகிகள் செய்யும் பிரச்சனையால் தலைமைக்கு நம் பிரச்சனைகளை கொண்டு போகவே முடியவில்லை. தலைமைக்கு ஒரு விசயத்தை நேரில் தெரிவிக்க முடியவில்லை என்பதால் மீடியா மூலமாக தெரிவித்தாலும் கூட அந்த தகவல் தலைமைக்கு சென்றும் பாதிக்கப்பட்டர்களை அழைத்து, என்ன பிரச்சனை என்று தலைமை பேசுவதே இல்லை. விஜய் கட்சி என்பதால் பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் என்று நினைத்துதான் சேர்ந்தேன். உள்ளே வந்து பார்த்த பின்னர்தான் தெரிகிறது. பொதுவாகவே தவெகவில் பெண்களுக்கு முன்னுரிமை இல்லை என்பது. அதனால்தான் பெண்களை புறக்கணிக்கும் தவெகவை புறக்கணிக்கிறேன்’’ என்று விளக்கம் அளித்திருந்தார்.

தேனி மாவட்டத்தில் வடுகபட்டியைச் சேர்ந்தவர் சத்யா நந்தகுமார், விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து தவெக வரையிலும் 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். தேனி மாவட்ட தவெக மகளிர் அணிச் செயலாளராக உள்ளார். தலைமைக்கு தன்னைப்பற்றி தவறான தகவல்களை கொடுத்து பணி செய்ய விடாமல் தடுக்கிறார்கள் என்று தவெக தேனி மாவட்ட வடக்கு மற்றும் தெற்கு செயலாளர்கள் மீது இவர் குற்றம்சாட்டி இருந்தார். தலைமைக்கு நேரடியாக தெரிவிக்க முடியாத காரணத்தினால் வீடியோ வெளியிட்டார்.

சத்யா நந்தகுமாரின் வீடியோ வைரலாகி தவெக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், சத்யா நந்தகுமாரை ஒருமையில் பேசி, அவரின் ஆடை குறித்தும் அருவறுப்பாக ஆபாசமாக பேசி, ‘தே… ‘என்றும் கடுமையாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார் பாண்டி.
இந்த வீடியோ வைரலாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் புஸ்ஸி ஆனந்தும், விஜய்யும் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தவெகவினர் இடையே அதிருப்தி நிலவி வந்தது.

தற்போது மாவட்டச் செயலாளர் நியமன விவகாரத்தில் தூத்துக்குடி அஜித்தா ஆக்னல் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை தொடர்பு கொள்ள முடியாததால் தலைவர் விஜயை பார்த்து முறையிட தனது ஆதரவாளர்களுடன் பனையூருக்கு திரண்டு வந்தார். காலை முதல் மதியம் வரையிலும் நடுரோட்டில் காத்திருந்த அஜிதா, விஜய் வந்ததும் அவரது காரை மறித்து முறையிட முயன்றார். ஆனால் விஜய் கார் நிற்காமல் அவரை முட்டித்தள்ளிவிட்டு சென்றுவிட்டது. இதன் பின்னர் அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா செய்தார். அதன் பின்னரும் விஜய் அவரை அழைத்துப் பேசாததால் அவர் சொந்த ஊர் திரும்பிவிட்டார்.

தனக்கு ஏற்பட்ட அவமானத்தை எண்ணி தூக்க மாத்திரிகைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்த அவரை மருத்துமனையில் சேர்த்துள்ளனர். அதன் பின்னரும் கூட தவெக தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது குறித்து விஜய்க்கு மக்கள் தொடர்பாளராக 27 ஆண்டுகள் பணிபுரிந்து, தலைமை மீதான அதிருப்தியால் திமுகவில் இணைந்துள்ள பி.டி.செல்வகுமார் வெடித்திருக்கிறார்.

’’பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்போம் என்று சொல்கிறார் விஜய். ஆனால் தவெகவில் அப்படி ஒன்று கிடையாது. காரை நிறுத்தி ஒரு வார்த்தை பேசினால் என்ன? அந்த அஜித்தா தற்கொலைக்கு முயற்சிக்கும் அளவுக்கு போயிருக்கிறார். தூத்துக்குடி மாவட்ட தவெகவில் மட்டுமல்ல. தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் தவெகவின் நிலைமை இப்படித்தான் இருக்கிறது. அதிருப்தி மாவட்டச் செயலாளர்கள் 20 பேர் என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

எங்களுக்கு ஏதாவது வழி பண்ணுங்க? என்று குமுறுகிறார்கள். தவெகவில் ஒரே புல்லுரிவி கூட்டம் அதிகரித்துவிட்டது. எங்களால் சகித்துக்கொண்டு இருக்க முடியவில்லை. எதற்கெடுத்தாலும் பணம் கேட்கும் கூட்டமாக மாறிவிட்டது தவெக தலைமை. பெத்த அப்பனுக்கே சந்திக்க அனுமதி தர மறுக்கும் விஜய் இவர்களை எங்கே கண்டு கொள்ளப்போகிறார்? நேருக்கு நேர் நின்ற அஜித்தாவையே கண்டுகொள்ளவில்லை. இவர்களின்பிரச்சனை அவருக்கு எங்கே தெரியப்போகிறது?
விஜயிடம் இருந்த போது, விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்த அவர்களை நான் கவனித்து வந்தேன். அந்த முறையில் என்னிடம் மன வேதனையை கொட்டுகிறார்கள். அவர்களை இன்னும் சில தினங்களில் சென்னை வரவழைத்து முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைக்க இருக்கிறேன்’’ என்கிறார் அவர்.
