உச்சத்தில் இருக்கிறேன் என்று மமதையில் இருக்கிறார் விஜய். அவர் உச்சத்திற்கு வருவதற்காக உழைத்தவர்களை அவர் கண்டுகொள்ளவே இல்லை. அவர்களுக்காக என்ன செய்திருக்கிறார் விஜய்? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார் விஜயிடம் 27 வருடங்கள் மக்கள் தொடர்பாளராக பணிபுரிந்த பி.டி.செல்வகுமார்.
அவர் மேலும், ‘’பெற்ற தகப்பனுக்கே சந்திக்க அனுமதி கொடுப்பதில்லை விஜய். விழாக்களில் மட்டுமே விஜயின் அம்மா, அப்பா அவர்களாகவே வந்து பங்கேற்கிறார்கள். ரசிகர்களுக்கு அவர் எதுவும் செய்யவில்லை. அவரை நம்பியிருந்த தயாரிப்பாளர்களுக்கு நல்லது செய்யவில்லை. அவர் கூட இருந்து உண்மையாக உழைத்தவர்களுக்கு எந்த நல்லதும் செய்யவில்லை. இப்படிப்பட்டவர் மக்களுக்கு மட்டும் நல்லது செய்துவிடுவார் என்று எப்படி நம்புவது? இப்படிப்பட்டவர் ஆட்சிக்கு வந்தால் நல்லதல்ல. விஜய் ஒரு தீய சக்தி.

விஜய் மாநாட்டுக்காக கந்துவட்டி வாங்கி அதை அடைக்க முடியாமல் ஒர்க்ஸ் ஷாப்பில் செய்து வந்த வேலையை விட்டே ஓடிவிட்டார். அதனால்தான் விஜய் ரசிகர்களுக்கு அறிவுறுத்துகிறேன். உங்கள் நலன் உங்கள் தொழில் முக்கியம். அதை மட்டுமே நம்புங்கள். கூட இருந்த அனுபவத்தில் சொல்கிறேன், யாருக்கும் எதுவும் செய்ய மாட்டார் விஜய். அவரை நம்பி ஏமாந்து போய்விடாதீர்கள். விஜய் ஆட்சிக்கு வந்தால் பாதிக்கப்படப்போவது தமிழ்நாட்டு மக்களும், தமிழ்நாட்டு இளைஞர்களும், தமிழ்நாட்டு நலன்களும்தான்.
’உச்சத்தில் இருக்கிறேன். 200 சம்பளம்’ என்று சொல்கிறார் விஜய். அப்படிப்பட்டவர் இதுவரையிலும் மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்?
விஜய்க்கு சமூக அக்கறை எதுவும் இருக்காது. நான் மக்களை நேசிப்பவன். என் சமுதாயத்தை நேசிப்பவன். இளைஞர்கள் அவரை நம்பி தவறான வழியில் சென்றுவிடக்கூடாது.
எஸ்.ஐ.ஆர். விவகாரத்தை அனைத்து கட்சியினரும் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டிருக்கும் போது தவெக நிர்வாகிகள் அனைவரும் மலேசியாவுக்கு ஜனநாயகன் படவிழாவுக்கு போய்விட்டார்கள். இதிலிருந்தே தவெக எங்கே போய்க்கொண்டிருக்கிறது? என்பது தெரியும்.

கூட்டம் இருப்பதால் எம்.ஜி.ஆர். மாதிரி வந்துவிடலாம் என்று நினைக்கிறார் விஜய். எம்.ஜி.ஆர். அரசியலில் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது அவருக்கு தெரியாது.
நான் விஜய் கூட இருந்தவன். அதனால் உண்மையைச் சொல்கிறேன். இதற்காக நான் பயப்படப்போவதில்லை.
சினகாவுக்கும் நமிதாவுக்கும்தான் கூட்டம் வருகிறது. அந்த காலத்தில் சில்க் ஸ்மிதா வந்தாலும் கூட்டம் கூடும். அப்படித்தான் நடிகர் வந்தாலும் கூடும். கரூரிலும் அப்படித்தான் கூட்டம் வந்தது. கரூரில் மக்களுக்கு செய்தது தவெகவின் திட்டமிட்ட சதி. வேண்டுமென்றே தாமதமாக வந்தார் விஜய். விஜய் கிளாமரை நம்புகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் மட்டுமே அவரை ஆதரிப்பார்கள்.

விஜய் சுகமாக வாழ்ந்தவர். கூண்டுகிளி மாதிரி வாழ்ந்தவர். ஒரு கூண்டுக்கிளிக்கு என்ன தெரியும்? நடிகருக்கான கிளாமர் இருக்கும் வரைதான் விஜயை ஆதரிப்பார்கள்.
ஜனநாயகன் என்று பெயர் வைத்தால் போதுமா? மக்களின் மீது உண்மையாக அக்கறை இருந்தால், தன் ஏழை ரசிகன் மீது உண்மையான அக்கறை இருந்தால், தன் படத்திற்கு அதிக டிக்கெட் கட்டணம் வசூலிக்க கூடாது என்று அறிக்கை விட தயாரா விஜய்? என்று வெடிக்கிறார்.
