உன்னாவ் (Unnao) பகுதியில் 2017-ல் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், பாஜக முன்னாள் MLA-க்கு ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது.
17வயது சிறுமி பாலியல் வன்கொடுமை
2017ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் (Uttar Pradesh) உன்னாவ் மாவட்டத்தில் நடந்த ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவம், இந்திய அரசியல் மற்றும் நீதித்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்பொழுது, 17 வயதான சிறுமி ஒருவர், உன்னாவ் தொகுதியின் பாஜக எம்.எல்.ஏவாக இருந்த குல்தீப் சிங் செங்கர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை முன்வைத்தார். என்னவென்றால், வேலை வாய்ப்பு தொடர்பாக உதவி கேட்பதற்காக சென்ற போது, அவர் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த சிறுமி புகார் அளித்தார். இந்த சம்பவம் 2017 ஜூன் மாதத்தில் நடந்ததாக கூறப்பட்டாலும், ஆரம்பத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்ய தயங்கினர். தொடர்ந்து, குற்றச்சாட்டுக்குள்ளானவர் ஆளும் கட்சியை சேர்ந்த சக்திவாய்ந்த அரசியல்வாதி என்பதால் விசாரணை தாமதமானதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பு குற்றம் சாட்டியது.
சிறுமி தீக்குளிக்க முயற்சி
இதனையடுத்து, சிறுமிக்கு நீதி கிடைக்காத நிலையில், 2018ஆம் ஆண்டு அந்த சிறுமி முதலமைச்சரின் இல்லம் அருகே தீக்குளிக்க முயன்ற சம்பவம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது. அதன்பிறகே இந்த வழக்கு தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கிடையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை போலீஸ் காவலில் இருந்தபோது மரணமடைந்த நிலையில், அவர் மீது பொய்யான வழக்குகள் பதிவு செய்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இந்த மரணம், வழக்கை மேலும் தீவிரமாக்கியது.இதனையடுத்து, உச்சநீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பிறகு இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
இதனைத்தொடர்ந்து, சிபிஐ விசாரணையின் முடிவில் குல்தீப் சிங் செங்கர் (Kuldeep Singh Sengar) மீது பாலியல் வன்கொடுமை, சாட்சியங்களை அழித்தல், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மிரட்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டன. தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு டெல்லி நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கி, செங்கரை பாலியல் வன்கொடுமை குற்றத்தில் குற்றவாளி என அறிவித்து ஆயுள் தண்டனை விதித்தது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை மரணத்துடன் தொடர்புடைய வழக்கிலும் அவருக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டது.
இந்த நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு 2025ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் செங்கரின் மேல்முறையீட்டை விசாரித்து, அவரது தண்டனையை தற்காலிகமாக இடைநிறுத்தி ஜாமீன் வழங்க உத்தரவிட்டது. இந்த முடிவு வெளியானதும், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பம் கடும் அதிர்ச்சி மற்றும் அச்சத்தை வெளிப்படுத்தினர்.மேலும், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இந்த ஜாமீன் உத்தரவை விமர்சித்தனர். இதையடுத்து, சிபிஐ மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பு உச்சநீதிமன்றத்தை நாடினர்.
அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இதன் மூலம் குல்தீப் சிங் செங்கர் உடனடியாக விடுதலை செய்யப்படுவது தடுக்கப்பட்டது. இந்த உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு, ஒரு தனிப்பட்ட குற்ற வழக்காக மட்டுமல்லாமல், அதிகார துஷ்பிரயோகம், காவல் துறையின் செயல்பாடு, அரசியல் செல்வாக்கு மற்றும் நீதித்துறை சவால்கள் ஆகிய அனைத்தையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த வழக்காக இந்திய வரலாற்றில் பதிவாகியுள்ளது.
