இந்தியாவில் மாரடைப்பால் (Heart attack)ஏற்படும் மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
குளிர்காலமும் இதய ஆரோக்கியமும் :
குளிர்காலம் பலருக்கு சுகமான பருவமாக இருந்தாலும், இதய நோயாளிகளுக்கு இது கூடுதல் கவனத்தை வேண்டிய காலமாகும். உலகளவில் மேற்கொள்ளப்பட்ட பல மருத்துவ ஆய்வுகள், குளிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படும் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பதை உறுதிப்படுத்துகின்றன. இதற்கு உடல் சார்ந்த மாற்றங்கள் மட்டுமல்ல, வாழ்க்கைமுறை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
குளிரால் இரத்த நாளங்களில் ஏற்படும் மாற்றங்கள் :
குளிர் காலநிலையில் (winter) உடல் வெப்பத்தை பாதுகாக்க மனித உடல் இயற்கையாகவே இரத்த நாளங்களைச் சுருக்குகிறது. இதனால் இரத்த அழுத்தம் உயர்கிறது. தொடர்ந்து, இரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது இதயம் வழக்கத்தை விட அதிகமாக வேலை செய்ய வேண்டிய நிலை உருவாகிறது. இதனால், ஏற்கனவே இதய நோய் அல்லது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இந்த மாற்றம் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது.
இதயத்திற்கு ஆக்ஸிஜன் கிடைப்பதில் ஏற்படும் குறைவு :
குளிர்காலத்தில் இரத்த நாளங்கள் சுருங்குவதால், இதய தசைகளுக்கு செல்ல வேண்டிய ஆக்ஸிஜன் அளவு குறை வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், அதே நேரத்தில் உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்த இதயம் அதிகமாக செயல்பட வேண்டியிருக்கும் என்றும் இந்த ஆக்ஸிஜன் தேவை மற்றும் கிடைப்பு இடையிலான முரண்பாடு இதய தசைகளை பாதித்து, திடீர் மாரடைப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரிக்கின்றனர்.
இரத்தத்தின் அடர்த்தி மற்றும் உறைதல் அபாயம் :
இதனையடுத்து குளிர்காலத்தில் தாகம் குறைவாக உணரப்படுவதால், பலர் போதுமான அளவு நீர் அருந்துவதில்லை. இதனால் இரத்தம் சற்று கனமாகி, உறையக்கூடிய தன்மை அதிகரிக்கிறது. மேலும், இதய இரத்த நாளங்களில் ஏற்கனவே கொழுப்பு அடைப்பு இருந்தால், அதில் இரத்த உறை உருவாகி இரத்த ஓட்டத்தை திடீரென தடுக்கலாம். இதுவே மாரடைப்பின் நேரடி காரணமாக மாறும்.
வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் உடற்பயிற்சி குறைவு :
இதனைத்தொடர்ந்து, குளிர் அதிகமாக இருப்பதால் வெளியில் சென்று நடைபயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்வதை பலர் தவிர்க்கிறார்கள். இதனால் உடல் இயக்கம் குறைவதால் உடல் எடை அதிகரித்தல் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரை அளவுகள் கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம் ஆகிய இவை அனைத்தும் இதய நோய்களுக்கு முக்கிய காரணிகளாகும்.
குளிர்கால உணவு பழக்கங்கள் :
இதனையடுத்து,இந்த பருவத்தில் எண்ணெய், கொழுப்பு மற்றும் கலோரி அதிகம் உள்ள உணவுகளை உண்ணும் பழக்கம் அதிகரிக்கிறது.மேலும், சூடான உணவுகள் என்ற பெயரில் அதிக அளவு நெய், வறுவல், இனிப்பு உணவுகள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இதனால், இவை நீண்ட காலத்தில் இதய இரத்த நாளங்களில் கொழுப்பு சேர்வதை அதிகரித்து மாரடைப்பு அபாயத்தை உயர்த்துகின்றன.
தொற்றுநோய்கள் மற்றும் உடல் அழற்சி :
மேலும் சளி, காய்ச்சல், சுவாசத் தொற்றுகள் குளிர்காலத்தில் அதிகமாக ஏற்படுகின்றன. இத்தகைய தொற்றுகள் உடலில் அழற்சியை அதிகரிக்கின்றன. இந்த அழற்சி நிலை இதய இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பு அடைப்புகளை நிலைகுலையச் செய்து, அவை உடைந்து இரத்த உறை உருவாகும் சூழலை உருவாக்கலாம். இதன் விளைவாக மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
மனஅழுத்தம் மற்றும் மனநிலை மாற்றங்கள் :
இதனைத்தொடர்ந்து, குளிர்காலத்தில் சூரிய ஒளி குறைவாக கிடைப்பதும், வெளிப்புற செயல்பாடுகள் குறைவதும் சிலருக்கு மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்தலாம்.இதனால், மனஅழுத்தம் அதிகரிக்கும் போது ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கின்றன. அவை இரத்த அழுத்தத்தையும் (Blood pressure) இதயத் துடிப்பையும் உயர்த்தி, இதயத்திற்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.
அதிக அபாயத்தில் உள்ளவர்கள் கவனிக்க வேண்டியவை
முதியவர்கள், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள், புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் குளிர்காலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியவர்களாக உள்ளனர். இவர்கள், குளிரை அலட்சியப்படுத்துவது அல்லது திடீரென குளிர்ந்த சூழலில் உடலைச் சிக்கவைத்துக்கொள்வது இதயத்திற்கு ஆபத்தானதாக மாறலாம்.
குளிர்காலத்தில் மாரடைப்பு அதிகரிப்பது பல காரணிகள் ஒன்றிணைந்த விளைவாகும். உடலின் இயற்கை மாற்றங்கள், இரத்த நாளங்களில் ஏற்படும் அழுத்தம், வாழ்க்கைமுறை மாற்றங்கள், உணவு பழக்கங்கள் மற்றும் மனநிலை ஆகிய அனைத்தும் இதில் பங்கு வகிக்கின்றன. இதனை உணர்ந்து, குளிர்காலத்தில் இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பது ஒவ்வொருவரின் பொறுப்பாகும். சரியான முன்னெச்சரிக்கைகள் எடுத்தால், இந்த பருவத்திலும் இதயத்தை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.
