தமிழ்நாட்டில் அரசு கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவியருக்கு மடிக்கணினி எனும் லேப்டாப் வழங்கும் (Laptop scheme) திட்டத்தை தொடங்கியுள்ளது மாநில அரசாங்கம். அரசு கலை-அறிவியல், பொறியியல், வேளாண், மருத்துவம் உள்ளிட்ட பல வகை கல்லூரிகளும், அரசு பாலிடெக்னிக்குகள், அரசு ஐ.டி.ஐ.கள் ஆகியவற்றில் பயிலும் மாணவ-மாணவிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவார்கள். முதல் கட்டமாக 10 இலட்சம் மாணவ-மாணவியருக்கு லேப் டாப் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.
உலகம் உங்கள் கையில் என்ற பெயரில் நடைபெற்ற இதற்கான விழாவில், தமிழ்நாடு அரசின் திட்டங்களால் படித்து உயர் பொறுப்புகளுக்கு வந்தவர்கள், பொருளாதார அறிஞர்கள், அறிவியல் துறை சாதனையாளர்கள், கலைத்துறையினர் ஆகியோர் கலந்துகொண்டு தமிழ்நாட்டின் வளர்ச்சியையும், மாணவர்களுக்கான வழிகாட்டுதலையும் எடுத்துரைத்துள்ளனர். கல்வி சிறந்த தமிழ்நாடு, வெல்லும் தமிழ்ப் பெண்கள் என ஏற்கனவே நடத்தப்பட்ட நிகழ்வுகளில் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றம், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்புகள், திறன் மேம்பாடு ஆகியவை குறித்து பயனாளிகள் உணர்ச்சிப்பூர்வமாக விளக்கியிருந்தனர். அதன் தொடர்ச்சியாக, உலகம் உங்கள் கையில் நிகழ்விலும் தமிழ்நாடு அடைந்துள்ள முன்னேற்றம் குறித்த பார்வைகள் வெளிப்பட்டன.
இந்தியாவில் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்துள்ள மாநிலம் மட்டுமல்ல, தனித்துவமான மாநிலமும் கூட. வளர்ச்சி என்பது ஒருசாராருக்குரியதல்ல, அது அனைவரையும் உள்ளடக்கியதாகவும், அனைத்துப் பகுதிகளிலும் அதனதன் தன்மைக்கேற்ப சீரான வளர்ச்சி இருக்கவேண்டும் என்பதையும் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தமிழ்நாட்டின் நிர்வாகத்தில் காண முடிகிறது. பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்டபோது, சென்னை மாகாணத்தில் அமைந்த நீதிக் கட்சி ஆட்சியில் தொடங்கி, சுதந்திர இந்தியாவிலும், குடியரசான பிறகு நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த காங்கிரஸ் அரசு காலத்திலும், அதன்பிறகு 1967 முதல் நடைப்பெற்று வரும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியிலும் இந்தத் தன்மை மேம்பட்டு வருவதைக் காணலாம்.
சுதந்திர தினத்தில் இந்தியாவின் பிரதமர் மோடி செங்கோட்டையில் கொடியேற்றிவிட்டு அறிவித்த மருத்துவக் காப்பீடு, கிராமங்களுக்கு மின் வசதி, விவசாயிகளுக்கான உழவர் சந்தை போன்றவை தமிழ்நாட்டில் 1970களில் தொடங்கி 1990களிலேயே நிறைவேறிவிட்டன. கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்பில் தமிழ்நாடு என்றென்றும் முன்னணியில் உள்ள மாநிலமாகத் திகழ்கிறது. தேசிய கல்விக்கொள்கை 2020 வலியுறுத்தும் இலக்குகளை தமிழ்நாடு ஏற்கனவே அடைந்துவிட்டது. பள்ளிக்கல்வி, கல்லூரிக் கல்வி, தொழிற்கல்லூரிக் கல்வி, ஆராய்ச்சிக் கல்வி எனத் தமிழ்நாடு ஒவ்வொரு காலகட்டத்திலும் அவற்றின் மீது கவனம் செலுத்தி வளர்த்துள்ளது.
காலத்திற்கேற்ற அறிவியல் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, இந்தியாவில் தகவல் தொழில்நுட்பக் கொள்கையை முதலில் உருவாக்கிய மாநிலம் தமிழ்நாடு (Tamilnadu). 1999ல் நடைபெற்ற தமிழ்நெட் 99 இணைய மாநாடு தொடங்கி, 2010 செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடைபெற்ற தமிழ் இணைய மாநாடு வரை பல கட்ட முயற்சிகளால் கணினி அறிவியல் தொடர்பாகவும், அதில் தமிழின் வளர்ச்சி தொடர்பாகவும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டைடல் பார்க்குகள் பல மாவட்டங்களில் உருவாக்கப்பட்டு, தரமான வேலைவாய்ப்புகளையும் தமிழ்நாட்டின் இளைஞர்கள் பெற்று வருகின்றனர்.
தமிழ்நாடு என்பது அதிகளவில் நகர்ப்புறமாக்கப்பட்ட மாநிலமாகும். அதாவது, சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற நகரங்கள் நவீன வசதிகளைக் கொண்டதாக இருப்பதுடன், அந்த நகரங்களை அடுத்துள்ள கிராமங்களிலும் நவீன வசதிக் கட்டமைப்புகள் உள்ளன. மருத்துவமனை, பள்ளிக்கூடம், இணைய சேவை, வீடுதோறும் கலர் டி.வி., செல்போன் பயன்பாடு ஆகியவை கிராமப்புறங்களிலும் நிறைந்துள்ளன. மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை அ.தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அறிமுகப்படுத்தி செயல்படுத்தினார். அதே அ.தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் அது நிறுத்தப்பட்டது.
தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் கல்லூரி மாணவ-மாணவியர் (College students) பயன்பெறும் வகையில் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்ட மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது மாணவர்களின் அறிவுத் தேடலுக்குத் துணை நிற்கும். இதற்கான விழாவில் முதலமைச்சர் பேசும்போது, ஒவ்வென்றிலும் நல்லது-கெட்டது என்று இரண்டும் இருக்கும். நல்லதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி, இந்த மடிக்கணினிகள் மூலம் மாணவ சமுதாயம் எதிர்கால வளர்ச்சிக்கான ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
தொடர்ச்சியாக பல நல்ல முன்னெடுப்புகள் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய லேப்டாப் என்பது டாப் கியர் திட்டம்.
