கேரள மாநிலம் ஆலப்புழா (Alappuzha) சாரும்மூடு பகுதியில் ஸ்கூட்டர் மோதி விபத்தில் உயிரிழந்த ஒரு பிச்சைக்காரரின் பையில் இருந்து ₹4.5 லட்ச ரூபாய் கிடைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அனில்கிஷோர் என்பவர் சாரும்மூடு (Charummoodu) மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் பிச்சை எடுத்துவந்துள்ளார்.இந்நிலையில், திங்கட்கிழமை மாலை இருசக்கர வாகனம் மோதி அவர் காயமடைந்தார். தொடர்ந்து, அருகிலிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், தலையில் காயம் இருந்ததால் மேல் சிகிச்சை தேவை என்று மருத்துவர்கள் கூறியிருந்த நிலையில், அவர் இரவிலேயே மருத்துவமனையை விட்டு சென்றுவிட்டார் எனக் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை சாரும்மூடு நகர எல்லைக்குள் உள்ள சாலை ஓரக் கால்வாயில் அவர் உயிரிழந்து கிடந்துள்ளார். பின்னர் அவரது உடல் அலப்புழா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, விபத்து நடந்த இடத்தில் கிடைத்த அவரது பையை போலீசார் சோதனை செய்த போது, அதில் பிளாஸ்டிக் டப்பாக்களில் மற்றும் பணப்பைகளில் பணம் இருந்தது தெரிய வந்தது. மொத்தமாக ₹4,52,207 ரொக்கம் மற்றும்12 சவுதி நாட்டு ரியால் (Saudi riyals) பண நோட்டுகளும் பழைய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் இருந்துள்ளன.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த பணத்தை போலீசார், பாதுகாப்பாக வைத்துள்ளதாகவும் இதுவரை இறந்தவரின் உறவினர்கள் யாரும் வரவில்லை என்றும் பணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
