இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கே.எல்.ராகுல் இருக்க மாட்டார் என இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 25 ஆம் தேதி முதல் மார்ச் 11-ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் ஹைதராபாத், ராஜ்கோட், விசாகப்பட்டினம், ராஞ்சி மற்றும் தரம்சாலா உள்ளிட்ட மைதானங்களில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவின் விக்கெட் கீப்பராக இருந்த கே.எல்.ராகுல் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விக்கெட் கீப்பராக செயல்பட மாட்டார் எனவும், பேட்டிங் மட்டுமே செய்வார் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், “இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் கே.எல். ராகுல் விக்கெட் கீப்பராக விளையாட மாட்டார். நாங்கள் விக்கெட் கீப்பராக கே.எஸ் பாரத் மற்றும் துருவ் ஜூரல் இரண்டு விக்கெட் கீப்பர்களைத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும், இதுபற்றி அணி தேர்விலேயே நாங்கள் முடிவெடுத்துவிட்டதாகவும், இவர்களே இந்த டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பராக செயல்படுவர்கள்”,என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கே.எல்.ராகுல் நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில், சிறப்பாக விளையாடி தனது திறமையை வெளிப்படுத்தி இருந்ததாகவும் டெஸ்ட் தொடரை சமன் செய்யும் வகையில் இந்திய அணிக்கு மிகப்பெரிய பங்காற்றினார் என்றும் ராகுல் டிராவிட் தெரிவித்தார்.
இருப்பினும், இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகளை கருத்தில் கொண்டும், இங்குள்ள சூழ்நிலையை பொறுத்தும் விக்கெட் கீப்பர் இடத்திற்கு கே.எஸ்.பரத் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோரை தேர்வு செய்வோம், இவர்களிடையே போட்டி இருக்கும் என்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
Published by அசோக் முருகன்