கனடிய ஆவணப்படமான “டு கில் எ டைகர்” 2024-ம் ஆண்டுக்கான அகாடமி விருதுகளில் சிறந்த ஆவணப்படத்திற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தனது மகளுக்கு நீதி கேட்டு போராடும் ஒரு தந்தையின் கதையை இப்படம் சொல்கிறது.
நிஷா பஹுஜா இயக்கிய இந்தப் படம், இந்தியாவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
‘டு கில் எ டைகர்’ – ஜார்கண்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தனது 13 வயது மகளுக்கு நீதி கோரி, வாழ்க்கைப் போராட்டத்தை நடத்தும் தந்தையின் பற்றிய திரைப்படம், 2024 அகாடமியில் சிறந்த ஆவணப் படத்திற்காக நேற்று(ஜனவரி 23) பரிந்துரைக்கப்பட்டது.
2022-ம் ஆண்டில் நடந்த டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் ஒளிபரப்பப்பட்ட ‘டு கில் எ டைகர்’ ஆவணப் படம் சிறந்த கனடிய திரைப்படத்திற்கான ஆம்ப்ளிஃபை வாய்ஸ் (Amplify Voices) விருதை வென்றிருந்தது.
இந்தியாவில், ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு பாலியல் வன்கொடுமைகள் பதிவாவதாகவும், ஆனால் தண்டனை விகிதம் 30% க்கும் குறைவாக உள்ளதாகவும், அந்த ஆவணப்படம் கூறுகிறது.
அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் ஒரு சாதாரண மனிதனின் உணர்ச்சிபூர்வமான பயணத்தை கூறும்வகையில் ‘டு கில் எ டைகர்’ ஆவணப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு சிறந்த ஆவணப்பட பிரிவில், தமிழ்நாட்டின் முதுமலையைச் சோ்ந்த பொம்மன்-பெள்ளி யானை காப்பாளா் தம்பதியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘The Elephant Whisperers’ ஆஸ்கா் விருதை வென்றது.
பிரபல ஹாலிவுட் இயக்குநா் கிறிஸ்டோஃபா் நோலன் இயக்கத்தில், ‘அணுகுண்டுகளின் தந்தை’ என்றழைக்கப்படும் ஜெ.ராபா்ட் ஓபன்ஹெய்மரின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘ஓபன்ஹெய்மா்’, சிறந்த படம், சிறந்த இயக்குநா் உள்பட 13 பிரிவுகளில் தோ்ந்தெடுக்கப்பட்டு பரிந்துரை பட்டியலில் இந்தாண்டு முன்னிலையில் இருக்கிறது.
ஆஸ்கர் விருது விழா வருகிற மார்ச் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது.