மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இல்லாத திரிணமூல் காங்கிரஸ் கட்சி இல்லாத எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணியை யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாது, என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
அசாம் மாநிலத்தில் நடைபெற்று வரும் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், எதிர்க்கட்சி கூட்டணியின் முக்கிய தூணாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விளங்குவதாக தெரிவித்துள்ளார்.
“மம்தா பானர்ஜி அவர்களின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி இல்லாத INDIA கூட்டணியை யாராலும் நினைத்துப் பார்க்க முடியாது; மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தலின்போது அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் சேர்ந்து போட்டியிடும்”, என்று அவர் கூறினார்.
‘மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பது நம் அனைவரின் தலையாய பொறுப்பு’ என மம்தா பானர்ஜி முன்பு கூறியிருந்ததை ஜெய்ராம் ரமேஷ் நினைவு கூர்ந்தும் பேசினார்.
மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைமைக்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கூட்டணியில் சலசலப்பு எழுந்திருக்கும் சூழலில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கருத்துத் தற்போது வெளியாகி இருக்கிறது.