சமூகத்தில் போலிச் செய்திகளால் ஏற்படக்கூடிய வன்முறை சம்பவங்களைத் தடுத்து உதவி வரும் Alt News இணை நிறுவனர் முகமது சுபைருக்கு, அவரது பணிகளை பாராட்டி தமிழ் நாடு அரசின் 2024 ஆம் ஆண்டிற்கான “கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது” வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு தமிழகத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் காணொளிகள் பரவி மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்த போது, அதன் உண்மை தன்மையை கண்டறிந்து அந்த காணொளியில் இடம்பெற்றவை தமிழ்நாட்டில் நடந்தது இல்லை என்பதை உறுதிப்படுத்தி சமூக பிரச்சனைகள் ஏற்படாமல் தடுத்தவர் முகமது ஜுபைர்.
முகமது ஜுபைர்
டிசம்பர் 29, 1983-ம் ஆண்டு பெங்களூருவில் பிறந்த முகமது ஜுபைரின் பூர்வீகம் தமிழ் நாட்டைச் சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஆகும். M.S. தொழில்நுட்ப கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த முகமது ஜுபைர், 10 ஆண்டுகளாக மென்பொருள் பொரியாளராக Nokia நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
2017-ம் ஆண்டு, ஜுபைர் மற்றும் அவரது சக முன்னாள் மென்பொருள் பொறியாளர் பிரதிக் சின்ஹா ஆகியோர் Alt News என்கிற லாப நோக்கமற்ற உண்மைச் சரிபார்பு செய்தி நிறுவனத்தை இணைந்து தொடங்கினர்.
Nokia நிறுவனத்தில் தொடர்ந்து பணிபுரிந்த ஜுபைர், ஒரு வருட காலம் Alt News தளத்தை பகுதிநேரமாக இயக்க பிரதிக் சின்ஹாவிற்கு உதவினார். இறுதியாக செப்டம்பர் 2018-ல் Nokia-வை விட்டு வெளியேறி Alt News செய்தி தளத்தில் முழுநேரம் பணியாற்றத் தொடங்கினார்.
இந்த சூழலில், வலதுசாரி அரசாங்கத்தால் முகமது ஜுபைர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர் குறிவைக்கப்படுகிறார் என்று பிரதிக் சின்ஹா கடந்த 2020-ம் ஆண்டு குற்றம் சாட்டினார்.
மேலும், 2021 மார்ச் மாதம் பதிவு செய்த ஒரு ட்வீட் இந்திய சட்டங்களை மீறியுள்ளதாகவும் இது குறித்து இந்திய சட்ட அதிகாரிகள் தங்களை அணுகியுள்ளதாகவும் டிவிட்டர் நிறுவனம் ஜுபைருக்கு நோட்டீஸ் வழங்கியது.
சமூக வலைதளங்களில் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளான முகமது ஜுபைருக்கு, மத்தியில் ஆளும் பாஜகவினரிடம் இருந்தும் நேரடி அச்சுறுத்தல்கள் வரத் தொடங்கியது.
நூபுர் ஷர்மா விவகாரம்
கடந்த 2022 மே 27-ம் தேதி Times Now தொலைகாட்சியில் ஞானவாபி பள்ளிவாசல் குறித்த விவாத நிகழ்ச்சியின் போது பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மா, முகமது நபி அவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
அதற்கு அடுத்த நாள், நூபுர் ஷர்மா பேசிய வீடியோ க்ளிப்பை சமூக ஊடகங்களில் முகமது ஜுபைர் பகிர்ந்தார்.
சித்திரிக்கப்பட்ட வீடியோ என்று கூறி நூபுர் ஷர்மா முதலில் மறுத்த நிலையில், Times Now தொலைகாட்சியின் யுட்யூப் சேனலில் வெளியான அந்த வீடியோவின் முழு கிளிப்பையும் ஜுபைர் பதிவு செய்தார்.
அந்த வீடியோவை அடுத்தநாள் Times Now தொலைக்காட்சி நீக்கி இருந்தது. ஆனால், நூபுர் ஷர்மா தனது கருத்தை திரும்பப் பெறமாட்டேன் என தெரிவித்ததோடு ஜுபைரின் பதிவுகளால் தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக குற்றம்சாட்டினார்.
நூபுர் ஷர்மாவின் கருத்துக்கள் இஸ்லாமிய நாடுகளின் கடும் கண்டனங்களுக்கு உள்ளானது. அந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு, ஜுபைர் மீது வேறொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
திட்டமிட்டுக் கைது செய்யப்பட்ட முகமது ஜுபைர்
1983-ம் ஆண்டு ஹிருஷிகேஷ் முகர்ஜி நடித்து வெளியான Kissi Se Na Kehna படத்தில் வரும் ஒரு காட்சிப் படத்தை கடந்த 2018-ம் ஆண்டு ஜுபைர் உட்பட பலராலும் பகிரப்பட்டிருந்தது.
19 ஜூன் 2022 அன்று, “ஹனுமான் பக்த் @balajikijaiin” என்ற பெயர் கொண்ட அடையாளம் தெரியாத ட்விட்டர் பயனர் ஒருவர் சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டிருந்த ஜுபைரின் ட்வீட்டை மேற்கோள் காட்டினார், இந்துக்களை நேரடியாக அவமதித்ததாக கூறி டெல்லி காவல்துறை நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டது.
27 ஜூன் 2022 அன்று, “மத உணர்வுகளை புண்படுத்தியதாக” குற்றம் சாட்டப்பட்டு டெல்லி காவல்துறையால் சுபைர் கைது செய்யப்பட்டார். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 295A மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 67 ஆகியவற்றின் கீழ் ஜுபைர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவரது மின் சாதனங்களும் கையகப் படுத்தப்பட்டது.
நூபுர் ஷர்மா விவகாரம் மற்றும் Alt News மூலம் உண்மை சரிபார்பு சேவையை செய்து வரும் ஜுபைர் மீது, அரசு திட்டமிட்டுப் பழிவாங்கும் நடவடிக்கையை எடுத்துள்ளதாக பல்வேறு பத்திரிகை அமைப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன.
ஜாமீன் கோரி வழக்குத் தொடர்ந்த ஒவ்வொரு முறையும், ஜுபைர் மீது புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, காவல் நீட்டிக்கப்பட்டு வந்தன.
இந்த சூழலில், 20 ஜூலை 2022 அன்று, உச்ச நீதிமன்றம் அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட ஏழு வழக்குகளிலும் ஜாமீன் வழங்கியது.
உத்தரபிரதேசத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்றியும், ஜுபைர் மீதான வழக்குகளை விசாரிக்க உத்தரபிரதேச அரசு அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழுவையும் கலைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் தாக்கப்படுவதாக பரப்பப்பட்ட விஷம பிரச்சாரம்
கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் இரண்டு வீடியோக்கள் வேகமாக பரவின. பீகாரில் அந்த வீடியோக்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
பீகார் மாநில எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக அந்த விவகாரத்தில் பெரிய அளவிலான பிரச்னையை கிளப்பி, தமிழ்நாட்டில் பீகார் மாநில தொழிலாளர்கள் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படுகிறது என்று அம்மாநில சட்டசபையில் அமளி செய்தது.
அந்த விவகாரம் பெரிய சர்ச்சையான போது, சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட வீடியோக்கள் பொய்யானது என்று முதலில் கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் முகமது ஜுபைர்.
அந்த விவகாரம் கலவரமாக மாறாமல் தடுத்த அவர், அந்த இரண்டு வீடியோக்களில் ஒன்று, பீகார்-ஜார்க்கண்ட் தொழிலாளர்கள் மோதல் சம்பவம் என்பதையும், மற்றொன்று தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்குள் நடத்திக்கொண்ட சண்டை என்கிற உண்மையையும் வெளிக் கொணர்ந்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், Alt News இணை நிறுவனர் முகமது ஜுபைருக்கு ‘மத நல்லிணக்க விருது’ வழங்கினார் (ஜன.26, 2024)
இந்த சூழலில், அவரது பணியை அங்கீகரிக்கும் வகையில் தமிழ்நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் ‘கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது’ இன்று(ஜனவரி 26) நடைபெற்ற குடியரசு தின விழாவில் வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்துள்ளது.