தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) வருகிற 2047-48 நிதியாண்டில் (FY48) 2.6 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரும் என்று ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
தொழில்மயமாக்கல் மற்றும் நகரமயமாக்கலில் முதலீடுகள் செய்ய வேண்டிய அவசியத்தையும் ஆய்வு வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கங்களின் கூட்டமைப்புடன் (CREDAI) இணைந்து நைட் ஃபிராங்க் இந்தியா (Knight Frank India) நடத்திய ஆய்வறிக்கை நேற்று(29/01/2024) வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 2009-ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு சராசரியாக 11 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
“எங்களின் கணிப்புகளின்படி, 2047-ம் ஆண்டுக்குள் 2.6 டிரில்லியன் டாலர் GSDP-யை தமிழ் நாடு எட்டும் சாத்தியம் உள்ளது” என்று நைட் ஃபிராங்க் இந்தியாவின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஷிஷிர் பைஜால் கூறியுள்ளார்.
தமிழ்நாடு இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதார மாநிலமாகவும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 8.8 சதவிகிதம் வரை பங்களித்து வருகிறது.
2023-24 நிதியாண்டில், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 294 பில்லியன் டாலர் அளவில் விரிவடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
வரும் 2048-ம் ஆண்டில் இந்தியா தனது சுதந்திர தின நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் போது, தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி 2.6 டிரில்லியன் டாலராக விரிவடையும் என்று அறிக்கை கூறுகிறது.