பாலிவுட் நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன் மற்றும் தீபிகா படுகோனே நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஃபைட்டர்’(Fighter) திரைப்படத்தில், இந்திய விமானப்படை சீருடையில் முத்தக் காட்சி வெளியானது தொடர்பாக சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த விமானப்படை அதிகாரி சவுமியா தீப் தாஸ், ‘ஃபைட்டர்’ படத்தின் தயாரிப்பாளர்களுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
விமானப் படை சீருடையுடன் ஹிருத்திக் ரோஷன் மற்றும் தீபிகா படுகோனே வரும் காட்சி ஒன்றில் முத்தமிடுவது இந்திய விமானப்படையை அவமதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஆபத்தான முன்னுதாரணமாக அமைந்துள்ள இந்த காட்சி, நமது எல்லைகளைப் பாதுகாக்கும் வீரர்களின் தார்மீக ஒழுக்க நெறிமுறைகளை குறைத்து மதிப்பிடும் ஒன்றாக உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சீருடையில் முத்தமிடுவது, ரொமாண்டிக்காக சித்தரிக்கப்பட்டாலும், விமானப் படை அதிகாரிக்கு மிகவும் பொருத்தமற்றதாகவும் முரணானதாகவும் உள்ளதாக நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பணியமர்த்தப்பட்ட இரண்டு போர் விமானிகளான Patty (ஹிருத்திக் ரோஷன்) மற்றும் Pragnya (தீபிகா படுகோனே) ஆகியோரைச் சுற்றி கதை நகர்கிறது. தீவிரவாத தாக்குதலுக்கு பின் நடக்கும் சம்பவங்கள் மூலம் ‘ஃபைட்டர்’ படம் உருவாக்கப்பட்டுள்ளது.
2019 புல்வாமா தாக்குதல், 2019 பாலகோட் வான்வழித் தாக்குதல் மற்றும் 2019 இந்தியா-பாகிஸ்தான் எல்லை மோதல்கள் ஆகியவை இந்த படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் அனில் கபூரும் மற்றொரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.
Viacom18 Studios மற்றும் Marflix Pictures தயாரிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள இந்த படம் கடந்த ஜனவரி 25-ம் தேதி வெளியானது.
‘ஃபைட்டர்’ படம் வெளியாகி சுமார் 12 நாள்களில், உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.