அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வரும் பாகிஸ்தானின் 12வது தேசிய பொதுத் தேர்தல் நாளை(08/02/2024) நடைபெறவுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள 24.1 கோடி மக்கள் தொகையில், சுமார் 12.85 கோடி தகுதியுள்ள வாக்காளர்கள் நாளை நடைபெறும் நாடாளுமன்றம் மற்றும் 4 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் வாக்களிக்க உள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள 266 நாடாளுமன்ற தொகுதிகளில் பெண்களுக்கு 60 இடங்களும், முஸ்லீம் அல்லாதவர்களுக்கு 10 இடங்களும் ஒதுக்கப்படும்.
தேர்தல்கள் மூலம் தேர்வு செய்யப்படும் ஆளுமைகளை விட பாகிஸ்தான் அரசியலில் பெரும் பங்கு வகித்து வரும் அந்நாட்டு ராணுவத்தின் தளபதிகளின் மாற்றமே உண்மையான அதிகார மாற்றமாக கருதப்படுகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் PML(N) கட்சித் தலைவர் நவாஸ் ஷெரீப்புக்கு பதிலாக முன்னாள் கிரிக்கெட் வீரரும் அரசியல்வாதியுமான இம்ரான் கானை வெற்றி பெற செய்த பாகிஸ்தான் ராணுவம், தற்போது மீண்டும் நவாஸ் ஷெரீப்பை பிரதமர் பதவியில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2023-ம் ஆண்டு மே மாதத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் செய்யப்பட்டதால் அந்நாட்டில் பல்வேறு கலவரங்களுக்கு வழிவகுத்த நிலையில், முன்னாள் வெளியுறவு அமைச்சர் முகமது குரேஷி உட்பட இம்ரான் கானின் PTI கட்சித் தலைவர்கள் பெரும்பாலானோர் அந்நாட்டுக் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தலுக்கு சில நாட்களே உள்ள சூழலில் கடந்த வாரத்தில் மட்டும் இம்ரான் கானுக்கு எதிரான 3 வெவ்வேறு வழக்குகளில் சுமார் 31 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது பாகிஸ்தான் ராணுவத்தின் விருப்பமான பிரதமர் வேட்பாளராக மூன்று முறை பிரதமராக இருந்த 74 வயதான நவாஸ் ஷெரீப் இருப்பதாகவும், அவரின் கட்சியே இந்த முறை ஆட்சி அமைக்கும் என சர்வதேச ஊடகங்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
தேர்ந்தெடுக்கப்படாத சக்திகளாக உள்ள பாக்கிஸ்தானின் தேர்தல் ஆணையம், நீதிமன்றங்கள் மற்றும் பாகிஸ்தான் இராணுவம் ஆகியவை இம்ரான் கான் மற்றும் அவரது கட்சிக்கு எதிரான ஒடுக்குமுறையை வழிநடத்துவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
இந்தியாவின் கண்ணோட்டத்தில், இந்தத் தேர்தல்கள் முன்னெப்போதையும் விட கணிக்கக்கூடிய ஒன்றாகவும், பாகிஸ்தான் ராணுவத்தின் நிலைப்பாடு தெளிவாக வெளியாகியுள்ளதாலும், நாளை (பிப்ரவரி 8) நடைபெற உள்ள தேர்தல் வெறும் சம்பிரதாயமாகவே பார்க்கப்படுகிறது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒரே ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல்களை எதிர்கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.