வருகிற 2025-ம் ஆண்டுக்குள் சுமார் 20 லட்சம் இந்தியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) திறன்களை கற்பிக்க திட்டமிட்டுள்ளதாக, Microsoft நிறுவனம் தனது லட்சிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ADVANTA(I)GE INDIA என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு(AI) தொழில்நுட்ப வளர்ச்சியை விரைவுபடுத்தவும், தனது நிறுவனத்திற்குத் தேவையான எதிர்கால தொழிலாளர்களை மேம்படுத்தும் நோக்கமாகக் கொண்டும், இந்தத் திட்டத்தை Microsoft நிறுவனம் செயல்படுத்த உள்ளது.
இந்தியா முழுவதிலும் உள்ள அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து ADVANTA(I)GE INDIA திட்டத்தை செயல்படுத்த Microsoft நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்திய வணிக நிறுவனத் தலைவர்களுடன் Microsoft நிறுவனம் நடத்திய ‘Work Force Index’ ஆய்வில் சுமார் 90% பேர் புதிய தொழிலாளர்களுக்கு செயற்கை நுண்ணறிவு(AI) திறன்கள் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
தற்போது பணியில் உள்ள சுமார் 78% தொழிலாளர்கள் செயற்கை நுண்ணறிவு(AI) திறன்களைக் கொண்டிருக்கவில்லை, என்றும் தெரிவித்துள்ளனர்.
ADVANTA(I)GE INDIA திட்டத்தின் மூலம் சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மக்களை மேம்படுத்தவும் நாடு முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் செயற்கை நுண்ணறிவு(AI) தொழில்நுட்பத்தை விரிவுபடுத்தவும் Microsoft நிறுவனம் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
கிராமப்புற கல்வி மையங்களில் சுமார் 5 லட்சம் மாணவ மாணவிகளுக்கு AI தொழில்நுட்பப் பயிற்சியை வழங்க மத்திய அரசு மற்றும் 10 மாநில அரசுகளுடன் இணைந்து Microsoft நிறுவனம் செயல்பட உள்ளது.
மேலும், சிறிய நகரங்களில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் மூலம் ஒரு லட்சம் மாணவிகளுக்கு மேம்பட்ட AI பயிற்சியை வழங்கவும், திட்டமிட்டுள்ளது.
Microsoft நிறுவத்தின் TEALS, Farm Beats மற்றும் பள்ளிகளுக்கான AI வழிகாட்டுதல் திட்டத்தின் மூலம் தொலைதூர, பழங்குடிப் பகுதிகளில் உள்ள 4 லட்சம் மாணவர்களுக்கு AI தொழில் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளதாகவும் Microsoft நிறுவனம் கூறியுள்ளது.