ஒரு சம்பிரதாய பொதுத் தேர்தலாக இருக்கும் என்று பலரும் நினைத்திருந்த பாகிஸ்தான் தேர்தலின் வாக்குப் பதிவு கடந்த பிப்ரவரி 8-ம் தேதி நடைபெற்று, தற்போது முடிவுகள் வெளியாகியுள்ளன.
முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டும் அவரது கட்சியின் ‘கிரிக்கெட் பேட்’ சின்னத்தைப் பயன்படுத்த தடை விதித்தும் அவரது கட்சி சார்பில் வேட்பாளர்கள் களமிறக்குவதை தடுத்தும் அந்நாட்டு ராணுவம் மறைமுக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
மூன்று முறை பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு அந்நாட்டின் அதிகாரம் வாய்ந்த சக்தியாகக் கருதப்படும் இராணுவம் உதவியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக, தேர்தலில் சுயேச்சைகளாகப் போட்டியிட்ட இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள், நவாஸ் ஷரீஃப் கட்சி உட்பட அனைத்து கட்சிகளையும் விஞ்சி அதிக இடங்களை வென்றுள்ளனர்.
பாக்கிஸ்தானின் அரசியலை தனது ஆதிக்கத்தில் வைத்திருக்கும் ராணுவத்தின் முயற்சியை முறியடிக்கும் வகையில் இம்ரான் கானின் PTI கட்சி தனது மக்கள் பலத்தை எடுத்துரைத்துள்ளது. இது ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி என்று கூறி PTI கட்சித் தலைவர்கள் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இம்ரான் கானின் ‘பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் (PTI) வேட்பாளர்கள் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், அவர்களால் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் உள்ளனர்.
மொத்தமுள்ள 265 நாடாளுமன்ற இடங்களில் இம்ரான் கான் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் சுமார் 101 பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியுள்ளனர்.
நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ்(PML-N) கட்சி 75 இடங்களிலும், பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி(PPP) 54 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
ஆட்சி அமைக்கத் தேவையான 133 இடங்களை எந்த கட்சியும் பெறாதது பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் ஆச்சரியம் அளிக்கும் விஷயம் இல்லை.
கடந்த 2006-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தின் ஆட்சி முடிவுக்கு வந்தது முதல், எந்த ஒரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மை இடங்களை பெற்றதில்லை.
அடுத்து என்ன?
நவாஸ் ஷெரீப் மற்றும் பூட்டோ கட்சிகள் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இந்த நடவடிக்கை இராணுவத்தால் ஆதரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், இன்னும் ஒரு இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை என செய்திகள் கூறுகின்றனர்.
இதற்கிடையில், தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ள இம்ரான் கான் தரப்பினர், வாக்கு எண்ணிக்கையில் அதிக வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தி வருகின்றனர்.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் இதேபோன்ற கவலைகளை வெளிப்படுத்தியுள்ள நிலையில், பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
பிலாவல் பூட்டோ ஜர்தாரியின் PPP கட்சியுடன் நவாஸ் ஷெரீப்பின் கட்சி ஒரு ஒப்பந்தத்தை எட்டி, இரு கட்சிகளும் மற்ற சிறிய கட்சிகளையும் மற்றும் இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் சிலரின் ஆதரவை பெற்று ஆட்சி அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, நவாஸ் ஷெரீப் அல்லது அவரது சகோதரர் ஷெஹ்பாஸ் ஷெரீப் மீண்டும் பிரதமராக பதவி ஏற்கலாம் என கூறப்படுகிறது.