‘சிறந்த அறிமுக படத்துக்கான இந்திரா காந்தி விருது’ மற்றும் ‘தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருது’ ஆகிய தேசிய திரைப்பட விருதுகளின் பெயர்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட கமிட்டி பரிந்துரைத்த மாற்றங்களை ஏற்று, தேசிய திரைப்பட விருதுகளில் புதிய நடைமுறைகள் கொண்டுவரப்பட உள்ளன.
தாதாசாகேப் பால்கே விருது உட்பட பல விருதுகளோடு சேர்த்து பண வெகுமதிகள் வழங்குவதிலும் புதிய முறையை கடைபிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய திரைப்பட விருதுகளில், இத்தகைய புதிய மாற்றங்கள் கொண்டுவருவதுக் குறித்து தொற்றுநோய் காலக்கட்டத்தின் போது ஆலோசிக்கப்பட்டதாகவும், இதுத் தொடர்பான இறுதி முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டதாகவும், PTI செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இந்தாண்டு வழங்கப்பட உள்ள 2022-ம் ஆண்டிற்கான தேசிய விருதுகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி முடிவடைந்தது.
கொரோனா தொற்று நோய் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2021-ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள், கடந்த 2023-ல் வழங்கப்பட்டது.
தொற்றுநோய் காரணமாக தேசிய விருதுகள் ஒரு வருடம் தாமதமாக வழங்கப்பட்டு வருகிறது.
கமிட்டி பரிந்துரைத்த மாற்றங்களின்படி, ‘இயக்குனரின் சிறந்த அறிமுகப் படத்திற்கான இந்திரா காந்தி விருது’ என்பதை ‘இயக்குனரின் சிறந்த அறிமுகப் படம்’ என மறுபெயரிடப் பட்டுள்ளது.
அதேபோல், ‘தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருது’ இனி ‘தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம்’ என்று மாற்றப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறைகள், இந்தாண்டு 2022-ம் ஆண்டிற்கான 70-வது தேசிய திரைப்பட விருதில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.