அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை (FEMA) மீறி PayTM Payments Bank நிறுவனத்தில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என ரிசர்வ் வங்கி குற்றம்சாட்டி இருப்பது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைத் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்pக விசாரணையைத் தொடங்குவதற்கு முன், Paytm நிறுவனத்தின் ஆவணங்களை பெற்று அமலாக்கத்துறை இயக்குநரகம் பூர்வாங்க ஆய்வுகளை நடத்தி வருவது தற்போது தெரியவந்துள்ளது.
சமீபத்தில் Paytm நிர்வாகிகள் சில ஆவணங்களை சமர்ப்பித்ததாகவும், அதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் சில கேள்விகள் கேள்விகளை கேட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் சில தகவல்கள் அந்த நிர்வாகிகளிடம் கோரப்பட்டதாக அமலாக்க இயக்குநரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இப்போதைக்கு எந்த முறைகேடுகளும் கண்டறியப்படவில்லை என்றும், மேலும் இந்தச் சட்டத்தின் கீழ் ஏதேனும் மீறல் கண்டறியப்பட்டால் மட்டுமே FEMA சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
Paytm நிறுவனத்திற்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ், ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
‘Paytm’ பிராண்டின் கீழ் நிதிச் சேவைகளை வழங்கி வரும் தாய் நிறுவனமான One97 கம்யூனிகேஷன்ஸிடம் வாடிக்கையாளர்களைப் பற்றிய தகவல்களை அமலாக்க இயக்குநரகம் சேகரித்து வருகிறது.
இந்த சூழலில், அமலாக்கத்துறை அதிகாரிகளுக்குத் தேவையான தகவல்கள், ஆவணங்கள் மற்றும் விளக்கங்களைத் தொடர்ந்து அளித்து வருவதாக PayTM நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், Paytm Payments Bank நிறுவனத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட சமீபத்திய நடவடிக்கைகள் குறித்த அறிக்கையைப் பகிருமாறு ரிசர்வ் வங்கியிடம் அமலாக்க இயக்குநரகம் மற்றும் நிதிப் புலனாய்வுப் பிரிவு கேட்டதாகவும் கூறப்படுகிறது.