நுகர்வோர்கள் தங்கள் மின் கட்டணங்களை செலுத்துவதற்கும் புகார்களைப் பதிவு செய்வதற்கும் எளிதான அணுகலை வழங்கும் வகையில், தமிழ்நாடு மின்சார வாரியம்(TANGEDCO) ஒருங்கிணைந்த மொபைல் செயலி ஒன்றை உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
இதைப் பயன்படுத்தி, நுகர்வோர்கள் மின் கட்டணம் செலுத்துவதோடு, மின்தடை, மீட்டர் பிரச்னை, ரசீது, மின்னழுத்த ஏற்ற இறக்கம்(Voltage Fluctuations), சேதமடைந்த மின்கம்பங்கள், எரிசக்தி திருட்டு, தீ மற்றும் மின்கடத்தி பாதிப்பு போன்ற புகார்களையும் இந்த செயலியில் பதிவு செய்யலாம்.
இது குறித்து TANGEDCO அதிகாரிகள் கூறுகையில், ‘நுகர்வோர் புகார்கள் கண்காணிப்பு அமைப்பு (CCMS)’ மூலம் செயலியில் பதிவாகும் புகார்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர். புகார்கள் மீது நடவடிக்கை எடுத்தப் பிறகு, புகார் குறித்த நிலையை செயலில் அதிகாரிகள் உடனியாக அப்டேட் செய்வார்கள் என்றும் கூறியுள்ளனர்.
இந்த செயலியின் பொதுமக்கள் பயன்பாட்டை பரவலாக விரிவுபடுத்தும் வகையில் விளம்பரப்படுத்துமாறு தலைமை பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்புப் பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரிய இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
நுகர்வோர்கள் Google Play Store-ல் இருந்து ‘TANGEDCO Mobile App’-ஐ பதிவிறக்கம் செய்து தங்கள் மொபைல் எண்களைப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.
உள்நுழைந்த பிறகு, பயனர்கள் தங்கள் நுகர்வோர் சேவை எண் மூலம் மின் கட்டணத்தை செலுத்தலாம்.
மேலும் தங்களது ‘சேவை இணைப்பு எண்’களைப் பயன்படுத்தி மின்வெட்டு, மீட்டர் பிரச்சனைகள், பில்லிங் மற்றும் மின்னழுத்த ஏற்ற இறக்கங்கள் உள்ளிட்டப் பிரச்சனைகள் குறித்த புகார்களை பதிவு செய்யலாம்.
நுகர்வோரின் புகார்கள் தவறவிடப்படுவதையும், தாமதமின்றி கவனிக்கப்படுவதையும் உறுதிசெய்ய, மின்வாரிய ஊழியர்களுக்கான மொபைல் செயலியை TANGEDCO ஏற்கனவே வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Google Play Store Link: TANGEDCO Mobile App