தமிழ்நாடு அரசின் 2024-2025 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், கல்வி மற்றும் மாணவர் நலன்கள் சார்ந்த பல்வேறு திட்டங்களும் அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன.
- பள்ளிக்கல்வி வளர்ச்சிக்கென தொடங்கப்பட்ட பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்த நிதியாண்டில் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது
- நவீன தொழில்நுட்பத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தவும் பொருத்தமான கற்றல் கற்பித்தல் சூழலை உருவாக்கவும், அரசு நடுநிலைப் பள்ளிகள் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் 2024-25 நிதியாண்டில் 15,000 திறன்மிகு வகுப்பறைகளை (Smart Classroom) உருவாக்க 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு
- முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ஊரகப்பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்படும் என அறிவிப்பு
- குழந்தைகள், வளர் இளம்பருவத்தினர் மற்றும் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் போது நூலகங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 213 கோடி ரூபாய் ஒதுக்கீடு
- அரசு பொறியியல், கலை அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் தொழில்நுட்பக் கல்லூரிகளில் புதிய கட்டடக் கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ள 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு
- 45 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளை தொழில்துறை 4.0 தரத்திற்கு உயர்த்திட 3,014 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டம்
- முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் கோயம்புத்தூரில் ‘நூலகம் மற்றும் அறிவியல் மையம்’ அமைக்கப்பட உள்ளதாக அறிவிப்பு
- 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் பொறியியல், வேளாண்மை உள்ளிட்டத் தொழிற்படிப்புகளில் சேரும் மாணவர்களின் முழு கல்விக் கட்டணத்தை அரசே ஏற்றுவரும் நிலையில், இந்த நிதியாண்டில் அதற்கு 511 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
- உயர்கல்வி பெற விரும்பும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும்
- அரசு மற்றும் அரசு உதவிபெறும் 100 பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் புதிய திறன் பயிற்சிக் கட்டமைப்புகளை (Skill Labs) உருவாக்க 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு
- ஒன்றிய அரசுப் பணிகளில் தமிழ்நாடு இளைஞர்கள் அதிகம் வெற்றிபெற உதவியாக சென்னை, கோவை, மதுரை மண்டலங்களில் உணவு, உறைவிட வசதியோடு கூடிய 6 மாத காலப் பயிற்சி வழங்க 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு
- தமிழ்நாடு அரசின் புதுமைப் பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளிலிலும் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது; இதற்காக பட்ஜெட்டில் ₹370 கோடி ஒதுக்கீடு
- அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் கல்வியை மெருகேற்ற ‘தமிழ்ப் புதல்வன் திட்டம்’ அறிமுகம்; இத்திட்டத்தில் மாதம்தோறும் மாணவர்களுக்கு ₹1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டின் 2024-25 நிதியாண்டு வரவு செலவுத் திட்டத்தில் பள்ளிக்கல்வித் துறைக்கு 44,042 கோடி ரூபாய்யும் உயர்கல்வித் துறைக்கு 8,212 கோடி ரூபாய்யும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.