சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சிக் கோப்பை காலிறுதிச் சுற்றுக்கு தமிழ் நாடு கிரிக்கெட் அணி தகுதிப் பெற்றுள்ளது.
இன்று நடந்த ரஞ்சிக் கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து தமிழ்நாடு அணி விளையாடியது.
தமிழ்நாடு வீரர்கள் இந்திரஜித் மற்றும் விஜய் சங்கர் ஆகியோரின் அபார சதங்கள் காரணமாக, முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 435 ரன்களை குவித்தது.
பஞ்சாப் அணி தரப்பில் சுக்விந்தர் சிங் 4 விக்கெட்டுகளையும், அபிஷேக் சர்மா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி முதல் இன்னிங்ஸில் 274 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. தமிழ்நாடு அணி தரப்பில் சிறப்பாக பந்துவீச்சு செய்த அஜித் ராம் 6 விக்கெட்டுகளையும், கேப்டன் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து பஞ்சாப் அணிக்கு ஃபாலோ ஆன் கொடுக்கப்பட்ட நிலையில், 2-வது இன்னிங்ஸில் பஞ்சாப் அணி பேட்டிங்கை தொடர்ந்தது.
இந்த சூழலில் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் சேர்த்த நிலையில், 19 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
தொடர்ந்து 4ஆம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், வெறும் 51 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. தமிழ்நாடு அணி சார்பாக சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளையும், அஜித் ராம் மற்றும் பிரதோஷ் ரஞ்சன் பால் இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
இதனால் தமிழ்நாடு அணி வெற்றிபெற 71 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், 7 ஓவர்களில் இலக்கை எட்டி பஞ்சாப் அணியை வீழ்த்தியது.
கடைசியாக கடந்த 2016-17 ஆண்டுகளில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பை போட்டியில் தமிழ் நாடு அணி இறுதி காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிப் பெற்றிருந்தது.
இந்த நிலையில் கேப்டன் சாய் கிஷோர் தலைமையிலான தமிழ்நாடு அணிக்கு வாழ்த்துத் தெரிவித்து இந்திய கிரிக்கெட் அணி வீரரும், தமிழக ஜாம்பவானுமான தினேஷ் கார்த்திக் தனது X தளத்தில் பாராட்டியுள்ளார்.