இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், இந்தியாவில் குறைந்த விலையில் ஃபேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல் பொருள்களை விற்பனை செய்ய ‘Bazaar’ என்கிற பெயரில் புதிய பிராண்ட்டை அறிமுகப்படுத்த உள்ளது.
ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, குறைந்த விலையில் ஃபேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல் பொருட்களை விற்பனை செய்யும் வகையில் ‘Bazaar’ என்கிற புதிய பிராண்ட் பெயர் மூலம் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள தனது செயலியில் அறிமுகம் செய்ய அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மேலும், ‘Bazaar’ ஸ்டோரில் பிராண்ட்டிங் செய்யப்படாத மற்றும் ட்ரெண்ட்டிங்கான ஃபேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல் பொருட்களை தயாரிக்கும் விற்பனையாளர்களின் பொருட்களை பட்டியலிட அமேசான் திட்டமிட்டுள்ளது.
விற்பனையாளர்களுக்கு உதவியாக அவர்களின் பொருட்களுக்கு கமிஷன் கட்டணம் ஏதும் விதிக்காமல், லாபத்தை ஈட்டும் வகையில் இந்த புதிய முன்னெடுப்பு இருக்கும் என அமேசான் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, இந்திய இ-காமர்ஸ் நிறுவனமான Meesho, இதேபோன்று விற்பனையாளர்களின் பொருட்களுக்கு கமிஷன் வாங்காமல், விளம்பரங்களில் இருந்து மட்டுமே வருமானத்தை ஈட்டி வருகிறது.
தற்போது, Meesho நிறுவனத்தின் ஆதிக்கத்தை குறைக்கும் வகையில் அமேசானின் ‘Bazaar’ ஸ்டோர் அமையலாம் என கணிக்கப்படுகிறது.
மேலும், ரிலையன்ஸ் நிறுவனமும் Ajio Street என்கிற பெயரில் குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்யும் இ-காமர்ஸ் ஸ்டோரை அறிமுகம் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளது.
இந்த சூழலில், ‘Bazaar’ பிராண்டின் மூலம் விற்பனை செய்யக் கோரி, விற்பனையாளர்களை ஈர்க்கும் வேலையை அமேசான் நிறுவனம் செய்யத் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆடைகள், கடிகாரங்கள், காலணிகள், நகைகள் உட்பட – 600 ரூபாய்க்கு குறைவான விலையில் பிராண்ட் செய்யப்படாத பொருட்களை ‘Bazaar’ ஸ்டோரில் பட்டியலிடுமாறு விற்பனையாளர்களிடம் அமேசான் கேட்டு வருகிறது.
இதற்கிடையில், டிசம்பர் 31, 2023 அன்று முடிவடைந்த காலாண்டில் Amazon நிறுவனத்தின் நிகர விற்பனை 14 சதவீதம் உயர்ந்து $170 பில்லியனாக அதிகரித்துள்ளது. இது கடந்த 2022-ஆம் ஆண்டு அதே காலாண்டு முடிவில் நிகர விற்பனை $149.2 பில்லியனாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.