ரயில்வே வசதி இல்லாத ஒரே இந்திய மாநிலமாக இருந்து வந்த சிக்கிம் மாநிலத்திற்கு விரைவில் ரயில் சேவை வர இருக்கிறது. சிக்கிம் மாநிலத்தின் முதல் ரயில் நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்ரவரி 26) அடிக்கல் நாட்டினார்.
முதற்கட்டமாக, மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் இருந்து சிக்கிம் மாநிலத்தின் பாக்யோங் மாவட்டம் இந்த திட்டத்தின் படி இணைக்கப்பட உள்ளது.
குறிப்பாக, டார்ஜிலிங் மாவட்டத்தின் சிவோக் ரயில் நிலையத்தில் இருந்து பாக்யோங் மாவட்டத்தின் ரங்போ என்கிற பகுதி ரயில் பாதை மூலம் இணைக்கப்பட உள்ளது.
இதன்படி மேற்கு வங்கத்தின் சிவோக் மற்றும் சிக்கிமின் ரங்போ இடையே சுமார் 45 கி.மீ. நீலம் ரயில் பாதை அமைக்கப்படுகிறது.
இந்த 45 கி.மீ. நீளம் ரயில் பாதையில், ஒரு சுரங்க ரயில் நிலையம் உட்பட 5 ரயில் நிலையங்கள் கட்டப்பட இருக்கிறது.
இரண்டாம் கட்டமாக, ரங்போ ரயில் நிலையத்தில் இருந்து சிக்கிம் தலைநகர் கேங்டாக் இணைக்கவும், மூன்றாம் கட்டமாக கேங்டாக் ரயில் நிலையத்தில் இருந்து சீன எல்லையோரம் உள்ள இந்திய பகுதியான ‘நதுளா’வை இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 1975-ம் ஆண்டு மே 16 அன்று மன்னராட்சி விலக்கப்பட்டப் பிறகு சிக்கிம் 22வது மாநிலமாக இந்தியாவின் அங்கமாக இணைந்தது.
இந்த ரயில்வே திட்டம் கடந்த 2009-ம் ஆண்டு திட்டமிடப்பட்டு கட்டப்படுவதாக இருந்த நிலையில், பல வருடங்களாக விரைந்து செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
முதற்கட்டமாக கட்டப்பட உள்ள சிவோக்-ரங்போ ரயில் திட்டத்தில், மொத்தம் 44.96 கி.மீ. நீளத்தில், 38.65 கிமீ (86 சதவீதம்) சுரங்கப்பாதைகளையும், 2.24 கிமீ (5 சதவீதம்) மேம்பாலங்களையும் கொண்டு அமைக்கப்பட உள்ளது.
இத்திட்டத்தில், NATM (New Austrian Tunneling Method) என்கிற புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 5,000 கோடி ரூபாயில் அமையவுள்ள இத்திட்டத்தின் கீழ், ரங்போவில் கட்டப்பட உள்ள சிக்கிம் மாநிலத்தின் முதல் ரயில் நிலையத்திற்கு பிரதமர் மோடி இன்று (பிப்ரவரி 26) அடிக்கல் நாட்டினார்.