வியட்நாமிய மின் வாகன தயாரிப்பு நிறுவனமான VinFast, அதன் கார்கள் மீதான இறக்குமதி வரியை சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு குறைக்குமாறு இந்திய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் கட்டப்பட்டு வரும் உற்பத்தி ஆலை செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பு, VinFast நிறுவனத்தின் தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ளும் வகையில், சில தயாரிப்புகளை இப்போதே இறக்குமதி செய்ய VinFast முயற்சித்து வருகிறது.
அடுத்த ஆண்டு மத்தியில் தமிழ்நாட்டில் உற்பத்தி தொடங்கப்படும் என்று நம்புவதாகவும், முதலில் உள்நாட்டு சந்தையிலும், பிறகு படிப்படியாக ஏற்றுமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக, VinFast-ன் இந்திய தலைமை நிர்வாக அதிகாரி பாம்-சான்-சாவ் Reuters செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சுமார் 16,577 கோடி ரூபாய்($2 பில்லியன்) முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ள VinFast, முதற்கட்டமாக வரும் 5 ஆண்டுகளுக்கு 4,144 கோடி ரூபாய்($500 மில்லியன்) முதலீடு செய்கிறது.
எலான் மஸ்க்கின் Tesla நிறுவனத்தைப் போலவே, VinFast நிறுவனமும் மின் வாகனங்கள் மீதான இந்தியாவின் 100 சதவீத இறக்குமதி வரியை சற்றுக் குறைக்குமாறு கேட்டுள்ளது.
உலகின் மூன்றாவது பெரிய வாகன சந்தையான இந்தியா, இந்த கோரிக்கைகளை பரிசீலித்து வருவதாகவும், ஆனால் எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை என்று அரசு அதிகாரி ஒருவர் கடந்த மாதம் தெரிவித்ததாக Gadgets360 கூறியுள்ளது.
“நாங்கள் … இறக்குமதி வரியை குறைக்க பரிந்துரைத்துள்ளோம் … இரண்டு ஆண்டுகளுக்கு 70 முதல் 80 சதவிகிதத்திற்கு இறக்குமதி வரியை கொண்டுவர கேட்டுள்ளதாக, VinFast இந்தியாவின் CEO பாம் சான் சாவ் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசு வருகிற 2030-ம் ஆண்டுக்குள் கார் விற்பனை சந்தையில் மின் வாகனங்களின் பங்கு சுமார் 30 சதவீதமாக அதிகரிக்க இலக்காகக் கொண்டுள்ளது.
இருப்பினும், கடந்த ஆண்டு இந்திய கார் விற்பனை சந்தையில் மின் வாகனங்கள் வெறும் 2 சதவீதத்தை மட்டுமே கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.