இலமாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் சூழலில், நேற்று நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்ற சம்பவம், காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2022 இமாச்சல பிரதேச சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் 40 இடங்களை கைப்பற்றி ஆட்சியில் உள்ளது. 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக உள்ள நிலையில், 25 எம்எல்ஏக்கள் உடன் பாஜக எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 எம்எல்ஏக்களும், 3 சுயேச்சை எம்எல்ஏக்களும் மாற்றி வாக்களித்ததால் காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடைந்த சம்பவம் அங்கு ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மகாஜன் மற்றும் காங்கிரஸ் வேட்பாளரும் மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி இருவரும் தலா 34 வாக்குகளைப் பெற்றதால், குலுக்கல் முறையில் பாஜக வேட்பாளர் நேற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, பெரும்பான்மை உறுப்பினர்கள் இல்லாத எங்கள் கட்சியின் வேட்பாளர் மாநிலங்களவை தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார் என்றும், காங்கிரஸ் தனது ஆட்சியைத் தொடர தார்மீக உரிமையை இழந்துள்ளதாகவும் கூறி, சட்டமன்றத்தில் பலத்தை நிரூபிக்கக் உத்தரவிடுமாறு பாஜக எதிர்க்கட்சித் தலைவர் அம்மாநில ஆளுநரை இன்று சந்தித்துக் கோரியுள்ளார்.
ஹிமாச்சல் பிரதேசத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில், இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த பாஜக கோரியுள்ளது.
இந்த சூழலில், ஹிமாச்சல் அரசியல் குழப்பத்தைத் தணிக்க கர்நாடக துணை முதல்வரும் காங்கிரஸ் மாநிலத் தலைவருமான DK சிவகுமார் ஹிமாச்சல் சென்றுள்ளார்.
‘பெரும்பான்மை இல்லாததால்’ ஆளும் காங்கிரஸை வெளியேற்றி மாநிலத்தில் தனது கட்சி விரைவில் ஆட்சி அமைக்கும் என மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மகாஜன் கூறியுள்ளார்.
பல காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாகவும், மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படப் போகிறது என்றும் ஹர்ஷ் மகாஜன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கும் மேலும் ஒரு பின்னடைவாக, ஹிமாச்சல் மாநில அரசியலில் முக்கியப் புள்ளியாக பார்க்கப்படும் அமைச்சர் விக்ரமாதித்ய சிங், முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலமையிலான ஆட்சி மீது அதிருப்தியை தெரிவித்து இன்று திடீரென ராஜினாமா செய்துள்ளார்.