தூத்துக்குடி: குலசேகரப்பட்டினத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) இரண்டாவது விண்வெளி நிலையம் அமைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று(பிப்ரவரி 28) அடிக்கல் நாட்டினார்.
950 கோடி ரூபாய் செலவில் அமைய உள்ள இந்த லட்சியத் திட்டம், இந்தியாவின் விண்வெளி ஆய்வுப் பயணத்தில் ஒரு முக்கிய வளர்ச்சியைக் குறிக்கிறது.
நாட்டின் செயற்கைக்கோள் ஏவுதல் திறன்களை மேம்படுத்த இந்தப் புதிய விண்வெளி நிலையம் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் மற்றும் சாத்தான்குளம் தாலுகாக்களில் உள்ள படுக்காபத்து, பள்ளக்குறிச்சி, மத்தவன்குறிச்சி ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 2,233 ஏக்கர் பரப்பளவில் புதிய விண்வெளி நிலையம் கட்டப்பட உள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் தற்போதுள்ள விண்வெளித் தளத்தைப் போல, எரிபொருள் சேமிப்பு மற்றும் திறமையான செயற்கைக்கோள் ஏவுதல்களுக்கு உறுதியளிக்கும் புவியியல் நன்மைகளை வழங்குவதற்கு மூலோபாய ரீதியாக சிறந்த இடமாக, குலசேகரப்பட்டினம் திகழ்கிறது.
சமீபத்தில், விண்வெளித் துறையில் 100% வரை அன்னிய நேரடி முதலீடுகளை அனுமதிக்கும் வகையில் மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ள சூழலில், இந்தத் திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணியை தமிழ்நாடு அரசு முடித்துள்ளது.
இந்த புதிய விண்வெளி நிலையத் திட்டம் மட்டுமல்லாமல், தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் விண்வெளி தொழில்துறை மற்றும் உந்துசக்தி பூங்காவை தமிழ்நாடு அரசு அமைக்க உள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்படும் செயற்கைக்கோள்களைப் போலன்றி, குலசேகரப்பட்டினம் விண்வெளி நிலையம் மூலம் நேரடியாக தெற்கு நோக்கி ராக்கெட்களை ஏவ உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது. இது எரிபொருளைச் சேமிப்பதற்கும், ராக்கெட் ஏவுவதற்கான நேரத்தைக் குறைத்து, இஸ்ரோவின் PayLoad திறனை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் இரண்டாவது விண்வெளி நிலையம் மற்றும் விண்வெளி தொழில்துறை-உந்துவிசைப் பூங்கா ஆகியவற்றை நிறுவும் இந்தப் புதியத் திட்டங்கள் மூலம், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு, கடலோர மாவட்டமான தூத்துக்குடியின் வளர்ச்சியையும் அதிகரிக்கும்என்று எதிர்பார்க்கப்படுகிறது.