ஆப்பிள் சப்ளையர், உற்பத்தியாளரான Pegatron நிறுவனம் இந்தியாவில் Macbook மற்றும் iPad சாதனங்களை உருவாக்கப் பிரத்தியேகமாக ஒரு புதிய தொழிற்சாலையை கட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய உள்நாட்டு சந்தையில் தனியாள்-கணினிகளின்(PCs) தேவை அதிகமாகி உள்ளதாலும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க இந்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சி மற்றும் PC, Tablets உள்ளிட்ட சாதனங்களின் இறக்குமதிக்குத் தடை விதிக்கும் அரசின் எதிர்கால நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு Pegatron குழுமம், இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய முற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தைவானைச் சேர்ந்த Pegatron குழுமம், சீனாவில் இருந்து Macbook மற்றும் iPad உற்பத்தியை இந்தோனேசியாவிற்கு மாற்ற திட்டுமிட்டு வருவதாக கடந்த 2019-ம் ஆண்டுத் தகவல்கள் வெளியாகின. ஆனால், Pegatron குழுமம் இதுவரை சீனாவில் உள்ள தனது உற்பத்தி ஆலையை வேறு நாட்டிற்கு மாற்றவில்லை.
இந்தியாவில் PC சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் புதிய திட்டத்தை இந்திய அரசு அறிவித்துள்ளதால், Macbook மற்றும் iPad உற்பத்தியை இந்தியாவில் தொடங்க Pegatron நிறுவனம் முடிவெடுத்திருக்கலாம் என Patently Apple இணையதள செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இந்தியாவில் PC உற்பத்தித் திறனை விரிவுபடுத்தும் சாத்தியங்கள் பற்றி, Pegatron நிறுவனத்தின் உற்பத்தி அதிகாரிகள் ஆலோசிக்கத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தத் தகவலை, Pegatron தலைவர் டோங் ஜிக்சியன் உறுதிப்படுத்தியதாக, தைவான் நாட்டைச் சேர்ந்த பிரபல UDN செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
தற்போது வரை கணினி உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் பெரிய அளவிலான உற்பத்தி ஆலைகளை தொடங்கவில்லை. Pegatron நிறுவனத்தின் இந்தத் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்பட்சத்தில், இந்திய உற்பத்தித் துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமையும்.
தமிழநாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் iPhone ஸ்மார்ட்ஃபோன்களை உற்பத்தி செய்து வரும் Pegatron, கடந்த ஜனவரி மாதம் நடந்த தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய முதலீட்டை அறிவித்தது.
இந்த சூழலில், Pegatron நிறுவனம் Macbook, iPad போன்ற சாதனங்களை இந்தியாவிலேயே தயாரிக்க புதிய ஆலையை கட்டி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.