மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா எல்லையில் உள்ள வங்கக்கடல் பகுதியில் கடற்குடுவை இனத்தைச் சேர்ந்த புதிய வகை உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்திய விலங்குகள் கணக்கெடுப்பு அமைப்பின்(ZSI) விஞ்ஞானிகள் கண்டுபிடித்த அந்த புதிய கடற்குடுவை இனத்திற்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் நினைவாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் உதய்பூர் மற்றும் திகா கடற்கரையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதிய இனம், “மெலனோக்லமிஸ் திரௌபதி” (Melanochlamys Droupadi) என்று பெயரிடப்பட்டதாக, இந்திய விலங்குகள் கணக்கெடுப்பு அமைப்பு இயக்குனர் த்ரிதி பானர்ஜி கூறியுள்ளார்.
உருவவியல், உடற்கூறியல் மற்றும் மூலக்கூறு பண்புகளை ஆய்வு செய்தப் பிறகு இனம் உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த கடற்குடுவை இனத்தின் அதிகபட்ச நீளம் 7 மிமீ வரையிலும், பழுப்பு மற்றும் கருப்பு நிறங்கள் கலந்த ஒரு ரூபி சிவப்பு புள்ளியுடன் காட்சி அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றின் இனப்பெருக்கம் நவம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கு இடையில் நிகழ்வதாக, ZSI அதிகாரி பிரசாத் சந்திர துடு தெரிவித்துள்ளார்.
‘மெலனோக்லமிஸ் திரௌபதி’ கடற்குடுவை இனம், உலகம் முழுவதிலும் பதிவாகியுள்ள மற்ற கடற்குடுவை உயிரினங்களைப் போலல்லாமல், இடது பின்புறத்தில் மாணிக்க சிவப்புப் புள்ளியைக் கொண்ட ஒரு தனித்துவமான இனமாகும், என ZSI அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஒரு முழுமையான ஆய்வுக்குப் பிறகே, இந்த இனம் புதியது என்பதை உறுதிபடுத்தியதாகவும், இது தொடர்பான ஆய்வுக் கட்டுரை முன்னணி அறிவியல் இதழான ‘மொல்லஸ்கா ரிசர்ச்’ (Mollusca Research) ஆன்லைன் பதிப்பில் வெளியிடப்பட்டுள்ளதாக, ZSI அதிகாரிகள் கூறியுள்ளனர்.