வரும் 2100-ஆம் ஆண்டளவில் 75% பனிக்கட்டிகளை இமயமலை இழக்கக்கூடும் எனவும், இதனால் ஆசியாவில் உள்ள பில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் கடும் எச்சரிக்கை விடுத்து CSE ஆராய்ச்சி அமைப்பு அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியிட்டுள்ளது.
உலகின் மூன்றாவது பெரிய பனி களஞ்சியமான இமயமலையின் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதாக, பல்வேறு ஆய்வுகள் தொடர்ந்து வெளியாகி வரும் சூழலில், இந்தியாவின் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (Centre for Science and Environment) மேலும் அதிரச்சியூட்டும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கடந்த 2013 முதல் 2022 வரை இந்தியாவில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களில் சுமார் 44 சதவீதம் இமையமலை பகுதியிலேயே ஏற்பட்டுள்ளதாக, CSE அமைப்பு வெளியிட்ட ‘இந்திய சுற்றுச்சூழல் நிலை-2024’ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக இமயமலையில் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மற்றும் அதிர்வெண்கள் உள்ளிட்ட ஆபத்தான புள்ளிவிவரங்கள் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் மலைத் தொடர் அருகே உள்ள இந்திய மாநிலங்கள் ஒரு சுற்றுச்சூழல் நெருக்கடி விளிம்பிற்குச் சென்றுள்ளதைக் காட்டுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
“உலகம் தொடர்ந்து வெப்பமயமாகுவதால் இமையமலையில் பனிப்பாறை உருகும் பேரழிவுகரமான நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றன, இதனால் குறிப்பிடத்தக்க உயிர் இழப்பு மற்றும் சொத்து சேதம் ஏற்படுகிறது”, என CSE அமைப்பின் சுற்றுச்சூழல் வளங்கள் பிரிவின் தலைவரான கிரண் பாண்டே நிலைமையின் தீவிரத்தை எடுத்துறைத்துள்ளார்.
பனிப்பாறைகளில் இருந்து பெறப்படும் நீரை பெரிதும் நம்பியிருக்கும் ஏறத்தாழ இரண்டு பில்லியன் மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களுக்கு நேரடி அச்சுறுத்தலாக இந்த நிகழ்வுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இமயமலையில் வேகமாக உருகி வரும் பனிப்பாறை அபாயங்களோடு, இமயமலையில் நிரந்தரமாக உறைந்த பகுதியான Permafrost பகுதியின் பரப்பளவும் சரிவைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக மேற்குப் பகுதியில், 2002-2004 மற்றும் 2018-2020 ஆண்டுகளுக்கு இடையில் சுமார் 8,340 சதுர கிலோமீட்டர் Permafrost பகுதி இமையமலை இழந்துள்ளது.
40 சதவீத இமயமலை பனிக்கட்டிகள் ஏற்கனவே அழிந்துவிட்ட நிலையில், தற்போதும் இதே நிலைத் தொடர்ந்தால், இந்த நூற்றாண்டின் இறுதியில் 75 சதவீதம் வரை பணிக்கட்டிகள் உருகிவிடும் என்ற அபாயகரமான எச்சரிக்கையுடன் CSE ஆராய்ச்சி அமைப்பு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.