நீங்கள் ஒருபோதும் விஷத்தை விரும்பி சாப்பிட மாட்டீர்கள், சரியா? ஆனால், சிறுக சிறுக நாம் உட்கொள்ளும் சர்க்கரை விஷம் போல் செயல்படுவது உங்களுக்குத் தெரியுமா? சர்க்கரையை உட்கொள்வது உடல் எடையை அதிகரிக்கும் என்கிற ஆபத்தை விட, அதிக ஆபத்துகளை நமது மனித உடலில் ஏற்படுத்துகிறது.
அதிகப்படியான சர்க்கரையானது இதய நோய், நீரிழிவு நோய், புற்றுநோய், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய்களின் வளர்ச்சிக்கு பங்களித்து நமது உடலை வேகமாக சேதப்படுத்துகிறது.
மேலும், சர்க்கரையால் நமது உடல் எளிதாக முதுமைத் தோற்றம் அடைந்து, வயதானவர்களுக்கு சருமத்தில் காணப்படும் சுருக்கம் கண்கள் இடுங்கி இருப்பது உள்ளிட்ட அறிகுறிகள் இளம் வயதிலேயே ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
உடலின் முழு சுகாதார அமைப்பிலும் சர்க்கரையால் ஏற்படும் நீண்டகால சேதத்தின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, சர்க்கரையின் ஆபத்தான தாக்கத்தைப் பற்றிய சில கடினமான உண்மைகளை இந்தப் பதிவில் காண்போம்.
சர்க்கரை உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது?
- உடல் எடையில் ஏற்படும் மாற்றங்கள் நாம் உட்கொள்ளும் சர்க்கரையின் அளவைப் பொறுத்து நேரடித் தொடர்பு உள்ளதாக, பல்வேறு மருத்துவ ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
- சர்க்கரை, லெப்டின்(Leptin) எதிர்ப்பைத் தூண்டுவதாக அறியப்படுகிறது. பசியை ஒழுங்குப்படுத்தவும் கட்டுப்படுத்துவதிலும் லெப்டின் முக்கிய பங்கு வகிக்கிறது. லெப்டின் என்கிற இயக்குநீரை உடலில் சுரக்குவதுக் கட்டுப்படுத்தப்பட்டால், கடுமையான உணவுப் பிரச்சனையை உருவாக்கி, உடல் பருமனை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும்.
- உடலுக்குத் தேவையான தினசரி கலோரிகளை சர்க்கரையிலிருந்து 25% அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் எடுத்துக்கொண்டால், இதய நோயால் உயிரிழக்கும் அபாயம் இரு மடங்கு அதிகமாகும் என JAMA Internal Medicine வெளியிட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
- சர்க்கரையில் உள்ள பிரக்டோஸ் (Fructose) உடலில் யூரிக் அமிலத்தை அதிகரிக்கும் என அறியப்பட்டுள்ளது. இதனால், ‘கீல்வாதம்’ (Gout) ஏற்படும் அபாயம் உள்ளது.
- அதிக சர்க்கரை உட்கொள்வது குரோமியம்(Chromium) குறைபாட்டிற்கு வழிவகுக்கும். குரோமியம் என்பது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு முக்கியமான தாதுப் பொருளாக இருப்பதால், இந்த குறைபாடு தனிநபர்களின் ஹைப்பர் கிளைசீமியாவால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. நீரிழிவு நோய்க்கு முந்தைய அறிகுறிகளை இது உருவாக்குகிறது.
- சர்க்கரை ‘நோய் எதிர்ப்பு சக்தி’யை(Immune System) குறைப்பதாக கண்டறியப்படுகிறது. 100 கிராம் சர்க்கரையை உட்கொள்வதனால், குறைந்தது 5 மணிநேரங்களுக்கு வெள்ளை இரத்த அணுக்களின்(WBC) செயல்பாட்டை 40% வரை குறைக்கலாம் எனக் கூறப்படுகிறது.
- உடலின் வயதாகும் செயல்முறையை (Cellular Aging Process) சர்க்கரை துரிதப்படுத்தும்.
- பிரக்டோஸ் அளவு அதிகளவில் உடலில் சேருவது, மது அல்லாத கல்லீரல் சார்ந்த நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
- சர்க்கரை அதிகமாக உட்கொள்வது மூளைப் புற்றுநோய்(Brain cancer), கணையப் புற்றுநோய் (53% வரை அதிகரித்த ஆபத்து), வாய்வழி புற்றுநோய் (10 முதல் 15% அதிகரித்த ஆபத்து), மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் (33% அதிகரித்த ஆபத்து) போன்ற சில வகையான புற்றுநோய்களை உருவாக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.
- 50 கிராம் பிரக்டோஸ் எடுத்துக்கொண்டால், வளர்சிதை மாற்றத்திற்கு காரணமான கல்லீரல் ATP-யை குறைக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. ATP என்பது நாம் உட்கொள்ளும் ஊட்டச்சத்துக்களை உடலுக்குப் பயன்படுத்தக்கூடிய ஆற்றலாக மாற்றப் பயன்படுவதாகும்.