தமிழ்நாட்டில் முதல் கட்சியாக மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியது திமுக. கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை வேகமாக நிறைவடைந்த நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் 2019-ஐ போலவே தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.
அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 இடங்கள் வழங்கி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், எந்தெந்த தொகுதிகள் என அறிவிக்கவில்லை.
இதனிடையே, 2 தனித் தொகுதிகள் மற்றும் ஒரு பொதுத்தொகுதி என 3 தொகுதிகளை விசிக கேட்டதாலும், 2 மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடத்தை மதிமுக கேட்டதாலும், தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் இழுபறி நீடித்தது.
தொடர் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், 2019 மக்களவைத் தேர்தலைப் போல, சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் விசிக போட்டியிடுவது என உடன்பாடு எட்டப்பட்டது.
இன்று நடந்த இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு மாநிலங்களவைத் தொகுதி ஒதுக்கப்படுவதாக உடன்படிக்கை எட்டப்பட்டது. திமுக கூட்டணி கட்சிகளை வெற்றிபெறச் செய்ய மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ளும் எனவும் மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது.
தொடர்ந்து, திமுக-காங்கிரஸ் கட்சிகளிடையே நடந்த இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஒரு புதுச்சேரி தொகுதிக்கான திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிப் பங்கீடு முடிவடைந்துள்ளது.