ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்ட குழு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களின் 4,120 சட்டப்பேரவைத் தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த செப்டம்பர் மாதம் 2-ம் தேதி உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டிருந்தது.
இந்த சூழலில், குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான பரிந்துரை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தவும், அதைத் தொடர்ந்து 100 நாட்களுக்குள் நாடு முழுவதும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவும் குழு பரிந்துரை செய்துள்ளது
5 ஆண்டு ஆட்சிக் காலம் நிறைவு பெருவதற்குள் தொங்கு சட்டசபை அல்லது நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் அரசு கவிழ்ந்தால், மீதமுள்ள காலத்திற்கு மட்டும் புதிய தேர்தலை நடத்தலாம்
மக்களவை மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு அரசியலைப்பில் திருத்தம் செய்ய தேவையில்லை
உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு மட்டுமே அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மாநிலங்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும்
நாடு முழுவதும் முதல் முறையாக ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தும்போது, 5 ஆண்டு ஆட்சிக் காலம் நிறைவு பெறாமல் இருக்கும் மாநில சட்டசபைகள் கலைக்கப்படும்
எடுத்துக்காட்டாக, 2029-ல் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தத் திட்டமிடப்பட்டால், வருகிற 2026, 2027 மற்றும் 2028-ல் சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொள்ள உள்ள மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசுகளின் பதவிக்காலம் 2029 வரை மட்டுமே இருக்கும்
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள், மனிதவளம், கூடுதல் பாதுகாப்புப் படை வீரர்கள் உள்ளிட்ட வசதிகளை முன்கூட்டியே திட்டமிட வேண்டும்
பொது வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை இந்திய தேர்தல் ஆணையம் மாநில தேர்தல் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தயாரிக்கவும் குழு பரிந்துரைத்துள்ளது.