குஜராத்தை சேர்ந்த ஒரு தலித் குடும்பத்திடம் கடந்த 2023 ஆகஸ்ட்டில் 11.14 கோடி ரூபாய்க்கு நிலத்தை வாங்கிய அதானி குழுமத்தின் AWEL நிறுவனம், பணத்தை கொடுக்காமல் தேர்தல் பத்திரத்தை வாங்க வைத்து ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அவ்வளவு பெரிய தொகை டெபாசிட் செய்யப்பட்டால் வருமானவரித் துறையின் ஆய்வுக்கு உட்படும் எனக் கூறி AWEL நிறுவனத்தின் மேலாளர் ஏமாற்றியதாக, அந்த குடும்பத்தை சேர்ந்த சவகர மன்வர் புகார் அளித்துள்ளார்.
அந்த தொகைக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கினால் சில ஆண்டுகளில் மதிப்புக் கூடும் என AWEL நிறுவனத்தின் மேலாளர் மகேந்திரசிங் சோதா தெரிவித்தை நம்பி தேர்தல் பத்திரங்களை வாங்க அந்த குடும்பம் ஒப்புக்கொண்டுள்ளது.
சவகர மன்வர் குடும்பத்தின் பேரில் கடந்த 2023 அக்டோபர் மாதத்தில் வாங்கப்பட்ட அந்த தேர்தல் பத்திரங்களை பாஜக பணமாக்கியுள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது.
இந்த சூழலில், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த தலித் குடும்பம், கடந்த மார்ச் மாதம் 18-ம் தேதி குஜராத் காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ள நிலையில், இன்னும் FIR பதிவு செய்யாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
சவகர மன்வர் குடும்பம் கொடுத்த புகாரில், AWEL நிறுவனத்தின் இயக்குநர்கள் விஸ்வநாதன் கொல்லங்கோடு, சஞ்சய் குப்தா, சிந்தன் தாக்கர், மற்றும் பிரவீன் பன்சாலி ஆகியோரும் நிறுவனத்தின் மேலாளர் மகேந்திரசிங் சோதா, நிலம் கையகப்படுத்துதல் அதிகாரி விமல் கிஷோர் ஜோஷி, மற்றும் அஞ்சார் நகர பாஜக தலைவர் ஹேமந்த் ஆகியோருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
The Quint Article Link: Electoral Bonds: Gujarat Dalit Farmer ‘Tricked’ Into Donating Rs 10 Crore to BJP