இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்கள் கடந்த ஒரு நூற்றாண்டில் இல்லாத வகையில், நாட்டின் மொத்த வருமானத்தில் தற்போது அதிக பங்கைக் கொண்டுள்ளதாக, உலக சமத்துவமின்மை ஆய்வகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
உலக சமத்துவமின்மை ஆய்வகத்தின் ஆய்வின்படி, மேல்மட்ட பணக்காரகளாக உள்ள 1 சதவீத இந்தியர்கள் நாட்டின் மொத்த தேசிய வருமானத்தில் 22.6 சதவீதத்தை ஈட்டுவதாகவும், வெறும் 15 சதவீத தேசிய வருமானத்தை மட்டுமே அடிமட்டத்தில் உள்ள 50 சதவீத இந்தியர்கள் ஈட்டுவதாகவும் தெரியவருகிறது.
நியூயார்க் பல்கலைக்கழகத்துடன் இணைந்து உலக சமத்துவமின்மை ஆய்வக ஆசிரியர்கள் நடத்திய ஆய்வு – ‘இந்தியாவின் வருமானம் மற்றும் சொத்துச் சமத்துவமின்மை 1992-2023: தி ரைஸ் ஆஃப் தி பில்லியனர் ராஜ் (The Rise of the billionaire Raj)’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய தேசிய வருமானத்தில் வரலாற்று உச்சம் தொட்டுள்ள சமத்துவமின்மையை சரிசெய்ய, இந்திய அரசு தனது வரிக் கொள்கைகளை மாற்ற வேண்டும் என உலக சமத்துவமின்மை ஆய்வகம் பரிந்துரைத்துள்ளது.
“2022-23 ஆம் ஆண்டில், சுமார் 22.6% மொத்த தேசிய வருமானம் 1 சதவிகிதத்தினர் ஈட்டுவது என்பது, இரு உலகப் போருக்கு இடையே(1918-1939) நிலவிய காலனித்துவ காலத்தில் இருந்ததை விட மிக அதிகமாகும்” என்று உலக சமத்துவமின்மை ஆய்வகம் கூறியுள்ளது.
மேல்மட்டப் பணக்காரர்கள் வருமானத்திற்கு மாறாக வைத்திருக்கும் சொத்துக்களின் அளவீடுகளும், சமமற்ற முறையில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
2023-ம் ஆண்டு நிலவரப்படி, நாட்டின் மொத்த தேசிய சொத்துகளில் சுமார் 50 சதவீத அடிமட்ட இந்தியர்கள் வெறும் 6.5 சதவீதம் என்ற அளவு மட்டுமே வைத்திருக்கும் நிலையில், சுமார் 40.1 சதவீத சொத்துகளை மேல்மட்ட ஒரு சதவீதத்தினர் வைத்துள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டின் மொத்த தேசிய சொத்துகளில் மேல்மட்ட பணக்காரர்கள் ஒரு சதவிகிதம் பேர் 25.4% என்ற அளவில் வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘இந்தியாவில் சொத்து வரிக் கொள்கை பிற்போக்குத்தனமாக இருக்கலாம்’ என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய பணக்காரர்கள் தாங்கள் வைத்திருக்கும் சொத்துகளின் பங்குகளை ஒப்பிடுகையில், மிக குறைவான வரிகளை மட்டுமே செலுத்தி வரலாம் என்றும் உலக சமத்துவமின்மை ஆய்வகம் சந்தேகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பணக்காரர்கள் மற்றும் பெரும் பணக்காரர்கள் மீது அதிக வரியை(Super Tax) விதிப்பது; ‘வருமானம் மற்றும் சொத்து’ ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய வரி கட்டமைப்புகளை மறுசீரமைக்க உலக சமத்துவமின்மை ஆய்வகம் பரிந்துரைத்துள்ளது.
கல்வி, சுகாதாரம் மற்றும் பிற பொது உள்கட்டமைப்பு ஆகியவற்றில் பெரிய முதலீடுகளை செய்ய நிதியளிப்பது உள்ளிட்டவையும் பயனுள்ள நடவடிக்கைகளாக இருக்கும் எனவும் உலக சமத்துவமின்மை ஆய்வகம் தெரிவித்துள்ளது.