இந்தியர்கள் எப்படி ‘மூளைச்சலவை’ செய்யப்படுகிறார்கள்? என்கிற தலைப்பில் புதிய வீடியோ வெளியிட்டுள்ள பிரபல ஹிந்தி மொழி யூட்யூபர் துருவ் ராதி “பொய் தொழிற்சாலை” என குறிப்பிட்டு அதில் நான்கு படி நிலைகள் பற்றி விளக்கியுள்ளார்.
பிரதமர் மோடியை விமர்சித்து ‘சர்வாதிகாரம்’ என்கிற தலைப்பில் வெளியிட்ட முந்தைய வீடியோ 50 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்த நிலையில், கடந்த 23-ம் தேதி வெளியிட்ட இந்த புதிய வீடியோ 12 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
தவறான தகவல்கள் மூலம் 4 படிநிலைகளில் வெறுப்பைப் பரப்ப வாட்ஸ்அப் பயன்படுத்தப்படுவதாக கூறியுள்ள துருவ் ராதி, ‘Mission 100’ என்ற பெயரில் போலி செய்திகளை பரப்பும் வாட்ஸ்அப் பிரபஞ்சத்தை கலைக்க அழைப்பு விடுத்துள்ளார்.
முதலில் “வாட்ஸ்அப் மாஃபியா” பற்றி பேசும் துருவ், அதை யாரும் தடுக்காததால், அது இப்போது ஒரு அரக்கனாக மாறிவிட்டதாக கூறியுள்ளார். இந்த வாட்ஸ்அப் மாஃபியா “இந்துக்களை குறிவைக்கிறது” என்றும், ஹிட்லர் “ஜெர்மன் ஆரியர்களை” மூளைச்சலவை செய்ததைப் போல் இந்தியர்கள் தற்போது மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள் எனவும் கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் வெறுப்பைப் பரப்பாமல் மக்களை வலையில் சிக்க வைத்து கலாச்சாரம், வரலாறு போன்றவற்றின் மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகளைப் பற்றி வீண் பெருமையை பேசவைப்பதே வாட்ஸ்அப் மாஃபியாக்களின் முதல்படி நிலையாக இருப்பதாக துருவ் கூறியுள்ளார்.
பல நூற்றாண்டுகளாக, “அவர்கள்” நம்மை எப்படியெல்லாம் ஆட்சி செய்து, நமது மகத்துவத்தையும் அடையாளத்தையும் அழித்தார்கள் என்பது பற்றி பேசி, சுய பரிதாபத்தை விளைவித்து வெறுப்பை உண்டாக்குவது மாஃபியாக்களின் 2-வது படி நிலையாக உள்ளது.
பிறகு “நீங்கள் ஆபத்தில் உள்ளீர்கள்” என்பது பற்றிய கட்டமைக்கப்பட்ட போலி செய்திகளை பகிர்ந்து மாஃபியாக்கள் பயமுறுத்துகின்றனர் என்றும், இங்குதான் தவறான தகவல்களையும் மிகைப்படுத்தப்பட்ட கூற்றுக்களைக் கூறி மக்கள் மூளை சலவை செய்யப்படுவதாக துருவ் ராதி கூறுகிறார்.
முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தினர் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று கட்டமைக்கப்படுவதோடு, பின்னர் எதிர்க்கட்சிகளை தொடர்புப்படுத்தி பாகிஸ்தான், சீனா மற்றும் பலவற்றை தூக்கி எறிந்து, மக்களை மேலும் பயமுறுத்துவதன் மூலம் பல தகவல்கள் பெரிதாக்கப்படுவதாக கூறியுள்ளார்.
மக்களிடையே போதுமான பயத்தை உருவாக்கிய பிறகு, 4-வது படி நிலையாக மோடியின் ஆளுமை பற்றிய செய்தியை பரப்பி “யார் நம்மைக் காப்பாற்றுவார்கள்?” என்பதற்கான பதில் “மோடி ஜி”, என்று திணிக்கப்படுவதாக துருவ் ராதி கூறியுள்ளார்.
ஜெர்மனியில் 1930-களில் நடந்தது போல், தற்போது இந்திய மக்கள் மூளைசலவை செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
ஹிட்லர் மற்றும் நாஜி ஜெர்மனியின் அபிமானிகளாக தீவிர இந்துத்துவாவின் நிறுவனர்களான சாவர்க்கர் மற்றும் கோல்வால்கர் எப்படி இருந்தார்கள் என்பதை துருவ் ராதே விரிவாகக் விளக்கியுள்ளார்.
ஜனநாயகத்தை காப்பாற்ற இந்தியர்கள் வாக்களிக்க வேண்டும் என்றும், பொய்களை தோற்கடிக்க தயாராகுங்கள் எனக் கேட்டுள்ள துருவ் ராதி, காந்தி, போஸ், பகத்சிங் மற்றும் டாக்டர் அம்பேத்கர் ஆகியோரை நினைவுகூர்ந்து பார்க்கவும் வலியுறுத்தியுள்ளார்.
தனது வீடியோவை பார்க்கும் அனைவரும் உண்மையின் பக்கம் நிற்குமாறும், பாஜக ஐடி செல்களிடம் இருந்து மக்கள் மூளைச் சலவை செய்யப்படுவதை அம்பலப்படுத்த துணை நிற்குமாறும் துருவ் ராதி அழைப்பு விடுத்துள்ளார்.