வாட்ஸ்ஆப் பயனர்களின் குறுஞ்செய்திகளை பாதுகாக்கும் ‘மறையாக்கம்’ (என்கிரிப்ஷன்) என்கிற தனியுரிமை அம்சத்தை மீற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், இந்தியாவில் வாட்ஸ்அப் செயலி மூடப்படும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
‘எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன்’ மூலம் அனுப்புநரும் பெறுநரும் மட்டுமே குறுஞ்செய்திகளை ‘பார்க்கவோ, படிக்கவோ’ முடியும் என்பதை உறுதி செய்வதன் மூலம் பயனர் தனியுரிமை பாதுகாக்கப்பட்டு வருவதாக வாட்ஸ்ஆப் கூறியுள்ளது.
இரகசிய தகவல் பரிமாற்றத்தில் மறையாக்கம்(என்கிரிப்ஷன்) என்பது வழக்கமாக ‘கீ’ எனப்படும் சிறப்பு அறிவைக் கொண்டிருப்பவர்களைத் தவிர வேறு யாரும் படித்துவிட இயலாதபடி செயல்முறையைப்(அல்கோரிதம் – சைஃபர்) பயன்படுத்தி தகவலை (வழக்கமாக பிளைன்டெக்ஸ்ட் என்று குறிப்பிடப்படுவது) மாற்றியமைக்கும் நிகழ்முறையாகும்.
“ஒரு தளமாக, வாட்ஸ்ஆப் செயல்பட்டு வருகிறது, பயனர்களின் என்கிரிப்ஷன் பாதுகாப்பை உடைக்கச் சொன்னால், வாட்ஸ்அப் இந்தியாவை விட்டு வெளியேறும்” என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ்ஆப் தரப்பு வழக்கறிஞர் தேஜஸ் கரியா தெரிவித்துள்ளார்.
வாட்ஸ்ஆப் வழங்கும் தனியுரிமை அம்சங்கள் காரணமாகதான் மக்கள் தங்களது செயலியை பயன்படுத்துவதாகவும் வழக்கறிஞர் தேஜஸ் கரியா வாதிட்டுள்ளார்.
இந்தியாவில் 40 கோடிக்கும் அதிகமான பயனர்களை வாட்ஸ்ஆப் கொண்டுள்ளது. வாட்ஸ்ஆப் தளத்திற்கான மிகப்பெரிய சந்தையாக இந்தியா திகழ்கிறது.
வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக் தாய் நிறுவனமான ‘மெட்டா’, இந்திய அரசு கடந்த 2021-ல் கொண்டுவந்த புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு இணங்க மறுத்து நீதிமன்றத்தை நாடியிருந்தது.
புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் படி வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்கள், தளங்களது பயனர்களின் அனைத்து Chat-களையும் கண்காணிக்கவும் அதை சேமித்து வைக்கவும் கட்டாயப்படுத்துகிறது.
இந்த சட்டம் பயனர்களின் தனியுரிமையை வழங்கி வரும் என்கிரிப்ஷன் வசதியை
பலவீனப்படுத்துவதாக கருதப்படுகிறது.
இந்த விதிகள் இந்திய அரசியலமைப்பின் படி, பயனர்களின் தனியுரிமை பாதுகாப்புகளை மீறுவதாக உள்ளதாகவும் நிறுவனங்கள் வாதிடுகின்றன.
இந்த விதிகள் வாட்ஸ்அப் செயலியின் என்கிரிப்ஷன் வசதியையும் பயனர்களின் தனியுரிமையையும் பலவீனப்படுத்துதலுக்கு உட்படுத்துவதாக, வாட்ஸ்அப் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பின் 14, 19 மற்றும் 21-வது பிரிவுகளின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பயனர்களின் அடிப்படை உரிமைகளையும் மீறுவதாக வாட்ஸ்அப் கூறியுள்ளது.
“உலகில் வேறு எங்கும் இதுபோன்ற விதி இல்லை. பிரேசிலில் கூட இல்லை. புதிய விதிகளின் கீழ், கோடிக் கணக்கான பயனர்களின் அனைத்து செய்திகளையும் கண்காணித்து பல வருடங்கள் சேமிக்கப்பட கட்டாயப்படுத்தப்படுவது ஏற்க முடியாது”, என்று வாட்ஸ்அப் தரப்பு வழக்கறிஞர் தேஜஸ் கரியா வாதிட்டுள்ளார்.
மத்திய அரசின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் கீர்த்திமான் சிங், செய்திகளை உருவாக்கியவர்களைக் கண்டறிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி புதிய விதிமுறைகளை ஆதரித்து வாதிட்டுள்ளார்.
இன்றைய சூழலில் இத்த்தகைய நடவடிக்கை அவசியம் என்றும் வகுப்புவாத வன்முறை போன்ற ஆட்சேபனைக்குரிய செய்திகள் சமூக ஊடகங்களில் பரவும்போது இந்த விதிகள் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் மத்திய அரசு வாதிட்டுள்ளது.
வாதங்களை கேட்ட டெல்லி உயர் நீதிமன்றம் மெட்டா நிறுவனத்தின் மனுவை ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.