முஸ்லிம்களை “ஊடுருவாளர்கள்” என்றும் அவர்கள் “அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்பவர்கள்” என்றும், மக்களின் சொத்துக்களை கைப்பற்றி முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அவமதித்து பிரதமர் மோடி பிரச்சாரக் கூட்டங்களில் பேசியுள்ளார்.
மோடியின் மத ரீதியிலான வெறுப்புப் பேச்சுக்கு எதிராக காங்கிரஸும் மற்ற அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்த பிறகு, முஸ்லிம்களைப் பற்றி வெளிப்படையாகக் குறிப்பிடுவதை மோடி நிறுத்தினார் – ஆனால் அது ஒரு நாள் மட்டுமே நீடித்தது.
ஏப்ரல் 21 முதல் 25 வரையிலான காலக்கட்டத்தில் மோடியின் ஒவ்வொரு பிரச்சார உரைகளையும் ஆராய்ந்து அதன் உண்மைத் தன்மையைக் கண்டறிந்து Scroll நிறுவனம் கட்டுரை வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 21 – பன்ஸ்வாரா, ராஜஸ்தான்
மோடியின் பொய்: திருமணமான இந்து பெண்களின் தாலி உட்பட மக்களின் சொத்துக்களை கணக்கெடுத்து, பறிமுதல் செய்து, மறுபங்கீடு செய்ய உள்ளதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உண்மை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மக்களின் சொத்துக்களை கணக்கெடுத்து, பறிமுதல் செய்யப்பட உள்ளதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை.
மோடியின் பொய்: நாட்டின் வளங்களில் முஸ்லீம்களுக்கே முதல் உரிமை உண்டு என்று முந்தைய காங்கிரஸ் அரசு கூறியது.
உண்மை: 2009-ல் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது ஆற்றிய உரையை திரித்து மோடி பேசியுள்ளார். மத சிறுபான்மையினர் மட்டுமின்றி, பட்டியல் சாதிகள், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அனைத்து பின்தங்கிய பிரிவினரையும் உயர்த்த வேண்டியதன் அவசியத்தைப் பற்றி மன்மோகன் சிங் பேசியிருந்தார்.
மோடியின் பொய்: மக்கள் சொத்துக்களை பறித்து “ஊடுருவாளர்கள்” மற்றும் “அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்பவர்களுக்கு” பங்கிடும்
உண்மை: முஸ்லீம்களை “ஊடுருவாளர்கள்” என்று கூறப்படுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை – மோடி அரசாங்கம் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் பற்றிய தரவு எதுவும் இல்லை என்று நாடாளுமன்றத்தில் பலமுறை கூறியுள்ளது. இந்திய முஸ்லீம்களின் கருவுறுதல் விகிதம்(Fertility rate), இந்துக்களை விட அதிகமாக இருந்தாலும், மற்ற அனைத்து சமூகங்களை விடவும் வேகமாக அந்த விகிதம் குறைந்து வருகிறது. மிகவும் வளர்ந்த மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்களின் கருவுறுதல் விகிதம் பீகாரில் உள்ள இந்துக்களை விட மிக குறைவு.
ஏப்ரல் 22 – அலிகார், உத்தரப்பிரதேசம்
மோடியின் பொய்: (ராகுல் காந்தியை குறிப்பிட்டு) காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், உங்களிடம் எவ்வளவு வருமானம், சொத்து, வீடுகள் உள்ளன என்பதைக் கண்டறிய ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதை கைப்பற்றி மறுபங்கீடு செய்வார்கள்
உண்மை: தனிப்பட்ட சொத்துக்களை கைப்பற்றி மறுபங்கீடு செய்யப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை
மோடியின் பொய்: “உங்கள் கிராமத்தில் உங்களுக்கு ஒரு பரம்பரை வீடும், உங்கள் குழந்தைகளுக்காக நகரத்தில் ஒரு சிறிய பிளாட் வாங்கியிருந்தால், அதில் ஒன்றை காங்கிரஸ் பறித்துவிடும். இது மாவோயிஸ்ட் சிந்தனை இல்லையா? காங்கிரஸ் நீங்கள் உழைத்து சம்பாதித்த சொத்துக்களை பறிக்க விரும்புகிறது, பெண்களின் சொத்துக்களை கொள்ளையடிக்க விரும்புகிறது.
உண்மை: காங்கிரஸின் தேர்தல் அறிக்கையின் மறுபங்கீடு பற்றிய ஒரே குறிப்பு இதுதான்: “நில உச்சவரம்புச் சட்டங்களின் கீழ் ஏழைகளுக்கு அரசு நிலம் மற்றும் உபரி நிலங்கள் விநியோகிக்கப்படுவதைக் கண்காணிக்க காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கும்”
ஏப்ரல் 23 – டோங்க்-சவாய் மாதோபூர், ராஜஸ்தான்
மோடியின் பொய்: உங்கள் வீட்டில் தானியங்களை சேமித்து வைக்கும் பெட்டி இருந்தால், அதுவும் காங்கிரஸின் எக்ஸ்ரேக்கு உட்படுத்தப்படும். உங்களிடம் இரண்டு வீடுகள் இருந்தால், ஒன்று காங்கிரஸ் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும்.
உண்மை: காங்கிரஸின் தேர்தல் அறிக்கையிலோ அல்லது அதன் தலைவர்களின் உரைகளிலோ மக்களின் வீடுகளைக் கைப்பற்றி மறுபங்கீடு செய்வதைப் பற்றி எங்கும் தெரிவிக்கப்படவில்லை.
ஏப்ரல் 24 – சாகர், மத்தியப் பிரதேசம்
மோடியின் பொய்: அனைத்து முஸ்லிம் சமூகங்களையும் OBC ஒதுக்கீட்டில் சேர்த்து, OBC இடஒதுக்கீட்டில் பெரும் பகுதியை பறித்து மத அடிப்படையில் வழங்கியது காங்கிரஸ்.
உண்மை: 1962 ஆம் ஆண்டில், கர்நாடகாவில் காங்கிரஸ் அரசாங்கம், நாகனா கவுடா கமிஷனின் பரிந்துரையின் பேரில் முஸ்லிம் சமூகங்களின் குறிப்பிட்ட சாதிகளை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) பட்டியலில் சேர்த்தது. அதற்கு முன்பே, மைசூர் மகாராஜா 1921-ல் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டுக் கொள்கையை அறிமுகப்படுத்தி இருந்தார்.
பின்னர், 1994-ல், HD தேவகவுடா தலைமையிலான ஜனதா தளம் (மதச்சார்பற்ற) அரசு, கர்நாடகாவில் உள்ள அனைத்து முஸ்லிம் சமூகங்களையும் OBC பட்டியலின் கீழ் கொண்டு வந்தது. மேலும், அவர்களுக்கு 4% உள் ஒதுக்கீட்டை உருவாக்கியது. மதச்சார்பற்ற ஜனதா தளம் தற்போது பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
12 ஆண்டுகள் மோடி முதலமைச்சராக இருந்த குஜராத்தில், OBC பிரிவில் முஸ்லிம் சமூகங்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ANI செய்தி நிறுவனத்திற்கு மோடி அளித்த பேட்டியில், குஜராத்தில் 70 முஸ்லீம் சாதிகள் இடஒதுக்கீடு பலன்களைப் பெற்றுவருவதாக மோடி பெருமையாகப் பேசியிருந்தார்.
மோடியின் பொய்: காங்கிரஸ் பரம்பரை சொத்து வரி விதிக்கும். உங்களின் சொத்துக்கள் உங்கள் பிள்ளைகளுக்குக் கிடைக்காது, காங்கிரஸ் அதை உங்களிடமிருந்து பறித்துவிடும்.
உண்மை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பரம்பரை சொத்து வரி பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. அமெரிக்காவில் வசிக்கும் முன்னாள் காங்கிரஸ் ஆலோசகர் சாம் பிட்ரோடா, பரம்பரை வரி என்பது ஒரு “நல்ல யோசனை” என்று கூறி இருந்தார். ஆனால் அவரது கருத்துக்களில் இருந்து காங்கிரஸ் உடன்படாமல் முறையாக விலகியது.
ஏப்ரல் 25 – ஆக்ரா, உத்திரப்பிரதேசம்
மோடியின் பொய்: மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதற்காக OBC-களுக்கான 27% ஒதுக்கீட்டில் ஒரு பகுதியை திருட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
உண்மை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மத அடிப்படையிலான இடஒதுக்கீடு பற்றிய குறிப்பு எதுவும் இல்லை.
Scroll Article Link: Fact-checking five days of Narendra Modi’s speeches: A catalogue of lies