கர்நாடகாவில் உள்ள ‘ஹாசன்’ மக்களவைத் தொகுதியில் ஏற்கனவே எம்.பி.யாக உள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவரும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுமான ‘பிரஜ்வால் ரேவண்ணா’ மீண்டும் போட்டியிட்ட நிலையில், வாக்குப் பதிவு ஏப்ரல் 26-ம் தேதி நிறைவுற்றது.
கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்த HD குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம், இந்த முறை பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது.
இந்த சூழலில், பிரஜ்வால் ரேவண்ணா பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பிரஜ்வால் ரேவண்ணா போட்டியிட்ட ஹாசன் தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 26-ம் தேதி முன்பிருந்தே இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
நூற்றுக்கணக்கான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சிக்கும் விவாதத்திற்கும் உள்ளாகி இருக்கும் நிலையில், பிரஜ்வால் ரேவண்ணா தொடர்புடைய 2,500-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், எதிர்க்கட்சியினரின் கடும் கண்டனத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகி இருக்கும் இந்த விவகாரத்தால், ஒட்டுமொத்த தேவகவுடா குடும்பமும் நிலை குலைந்து போயுள்ளது.
கடந்த ஏப்ரல் 23-ம் தேதி மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேர்தல் நிர்வாகி பூர்ணசந்திரா, பிரஜ்வால் ரேவண்ணாவின் பெயரைக்கெடுக்கவே இத்தகைய போலி ஆபாச வீடியோக்கள் பரவ விடப்பட்டுள்ளதாக கர்நாடக காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
சர்ச்சைகள் பூதாகரமாகி வந்ததால், பிரஜ்வால் ரேவண்ணா இந்தியாவை விட்டுத் தப்பி ஜெர்மனி சென்றுவிட்டதாகவும், ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சூழலில், ஏப்ரல் 27-ம் தேதி இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை(SIT) அமைத்து கர்நாடக முதல்வர் சித்தராமையா அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
HD ரேவண்ணாவுக்கு எதிராக பாலியல் புகார்
இந்த சர்ச்சைக்கு மத்தியில், ரேவண்ணா வீட்டில் மூன்றரை ஆண்டுகளாக பணிபுரிந்த பெண் ஒருவரின் புகாரின் அடிப்படையில் நேற்று(ஏப்ரல் 28) ஹோலனர்சிபூர் காவல் துறையினர் பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தையும் முன்னாள் அமைச்சருமான HD ரேவண்ணா ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை(FIR) பதிவு செய்துள்ளனர்.
புகார் அளித்த அந்தப் பெண், HD ரேவண்ணாவின் மனைவியின் உறவினர் என்பதும் தகவல் வெளியாகியுள்ளது.
பாலியல் புகாரின் பேரில் மகன் மற்றும் தந்தை மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் கிரிமினல் மிரட்டல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தனது மனைவி வீட்டில் இல்லாத நேரங்களிலெல்லாம் HD ரேவண்ணாவின் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், வீட்டில் இருந்த பெண் வேலையாட்களை ‘பிரஜ்வல் ரேவண்ணா’ தகாத முறையில் சீண்டியதாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
டிசம்பர் மாதமே எச்சரித்த பாஜக நிர்வாகி
பிரஜ்வால் ரேவண்ணா தொடர்புள்ள ஆபாச வீடியோக்கள் குறித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே ஹாசன் மாவட்ட பாஜக தலைவர், கர்நாடக மாநில பாஜக தலைவருக்கு கடிதம் எழுதி எச்சரித்திருந்தது தற்போது தெரியவந்துள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்துப் போட்டியிட கடந்தாண்டு செப்டெம்பர் மாதம் முடிவு செய்திருந்தன.
இந்த சூழலில், கடந்த டிசம்பர் 8-ம் தேதி பிரஜ்வால் ரேவண்ணா தொடர்புள்ள சுமார் 2,976 ஆபாச வீடியோக்களைக் கொண்ட Pen Drive தனக்குக் கிட்டியதாகவும், இந்த வீடியோக்கள் காங்கிரஸ் தலைமைக்கும் சென்றுள்ளதாகவும் ஹாசன் மாவட்ட பாஜக தலைவர் எச்சரித்திருந்துள்ளார்.
மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் பாஜக கூட்டணி வைத்தால் கட்சி பின்னடைவை சந்திக்கும் என்றும் அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளார். பிரஜ்வால் ரேவண்ணா தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுகள் தெரிந்தும் , தேர்தல் வெற்றிக்காக பாஜக கூட்டணி அமைத்திருப்பதும் அம்பலமாகி உள்ளது.
பாஜகவிடம் விளக்கம் கேட்கும் காங்கிரஸ்
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் தொடர்பாக கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா விளக்கமளிக்க வேண்டும் என்றும், பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் அமைதிக் காக்கக் கூடாது என்றும் காங்கிரஸ் தலைவரும் கர்நாடக துணை முதல்வரும் DK சிவகுமார் கேட்டுள்ளார்.
கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் இரண்டாம் கட்டமாக 14 தொகுதிகளுக்கு மே 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.