எக்ஸ் தளத்தில் #ArrestNarendraModii என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இந்த நிலையில் திடீரென்று, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு கோவின் இணையம் மூலமாக வழங்கப்படும் சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடிக்கு எதிராக #GoBackModi , #GetOutModi என்கிற ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வந்தததை போல், #ArrestNarendraModi ஹேஷ்டெக் டிரெண்டாகி வரக்காரணம் என்ன?
மணிப்பூர் கலவரத்தில் கடைசிவரை மவுனம், மல்யுத்த வீராங்கனைகளின் கண்ணீர், சிறுபான்மையினருக்கு எதிரான பிரச்சாரம், பெருந்தொழிலதிபர்கள் மீது காட்டும் கரிசனம், எளிய மக்கள் மீது பாராமுகம் என பிரதமர் மோடி மீது எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.
இந்த சூழலில், பாஜகவின் கூட்டணி கட்சியான JDS கட்சி எம்பியும் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வால் ரேவண்ணா பாலியல் புகாரில் சிக்கி உள்ளதால், பாஜக கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
பெண் சக்தி என்று பெருமையாக பேசும் மோடி, பாதிக்கப்பட்ட இந்த பெண்களின் கண்ணீரை துடைக்க முன்வருவதே இல்லை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
கர்நாடக மாநிலத்தின் ஹாசன் தொகுதி எம்பி பிரஜ்வல் ரேவண்ணா, மீண்டும் அதே தொகுதியில் பாஜக கூட்டணி சார்பாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் இவர் பல பெண்களை சீரழித்து உள்ளதாகவும், பிரஜ்வலின் Pen-Drive-ல் இருந்து 3000 பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளன என்பது அதிரவைக்கின்றன. இத்தனையும் செய்த இவரை ஜெர்மனிக்கு தப்பிச்செல்ல வைத்து மக்களை பாஜக தலைமை அதிகம் கொதித்தெழ வைத்துள்ளதாக, எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர்.
கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனர் தயாரித்தது. இந்த தடுப்பூசியால் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் பல பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறி 51 பேர் பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படவே, ‘’ ரத்தம் உறைதல், பிளேட்லெட் குறைவு போன்ற மிக அரிதான பக்கவிளைவுகள் ஏற்படலாம்’’ என்று அந்த தடுப்பூசியைக் கண்டுபிடித்த ஆஸ்ட்ரோஜினிகா நிறுவனமே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் இந்தியாவில் பரவிய நிலையில், பாஜகவும் பிரதமர் மோடியும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளனர். கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படுவது மிக மிக அரிதானது என்றே ஆஸ்ட்ரோஜினிகா நிறுவனம் கூறியுள்ள நிலையில், #ArrestNarendraModi என்கிற Hashtag-ன் கீழ் இந்த விவகாரமும் பதிவிடப்பட்டு வருகிறது. ‘அட பாவிகளா, கோவாக்சினை விட கோவிஷீல்டு தான் பெட்டர்னு சொல்லி அநியாயமா எங்களை படுகுழியில தள்ளிட்டீங்களே படுபாவிகளா? என்பன போன்ற போஸ்ட்களை அந்த Hashtag-ன் கீழ் பதிவு செய்துக் கொண்டிருக்கின்றனர்.
இது ஒருபுறம் இருக்க கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு கோவின் இணையம் மூலமாக வழங்கப்படும் சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது.