தனது 44 வருட திரையுலக பயணத்தில் 6 ஆண்டுகள் மட்டுமே இளையராஜாவுடன் பயணித்திருக்கிறார் வைரமுத்து. 38 ஆண்டுகள் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றவில்லை என்றாலும் இருவருக்கும் இடையேயான மோதல் மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இசைதான் பெரிது, தான் தான் மேலானவன் என்கிற ரீதியிலேயே இளையராஜாவின் பேச்சுக்கள் இருப்பதால், அதற்கு பதிலடி தரும் விதமாகவே வைரமுத்துவின் பேச்சுக்கள் அமையும்.
வைரமுத்துவின் கவிதை பேசும் ஸ்டைல் குறித்தும் மேடைகளிலேயே கிண்டலடித்திருக்கிறார் இளையராஜா.
வைரமுத்து இருந்த அரங்கத்தில், ’’கண்ணதாசனை விட சிறந்த கவிஞர் எவரும் இல்லை’’ என்று சொல்லி இளையராஜா அதிரவைக்க, அதே அரங்கத்திலேயே, ’’எம்.எஸ்.விஸ்வநாதனை விட எவரும் சிறந்த இசையமைப்பாளர் இல்லை’’ என்று பதிலடி கொடுத்தவர் வைரமுத்து.
மிகச்சில ஆண்டுகளில் மிச்சில படங்களில் மட்டுமே இளையராஜாவும் வைரமுத்துவும் இணைந்து பணியாற்றினாலும் அவர்கள் தந்த பாடல்கள் எல்லாம் தேனமுது. அதனால்தான் இருவமும் இணைய வேண்டும் என்று பலரும் முயற்சி எடுத்தார்கள். அத்தனை முயற்சியுமே தோல்வியில்தான் முடிந்தது. இணைந்து பணியாற்றுவதற்கு வைரமுத்து தயாராக இருந்தும் இளையராஜா கொஞ்சம் கூட அதற்கு இசைந்து வரவில்லை.
பொதுவாகவே மேடையில் பலரை குறைத்து மதிப்பிட்டுப் பேசி, பெரிதாக சாதித்த அவர்களுக்கு பெரிதாக ஒன்றுமே தெரியாது என்பது போல் பேசி அதில் ஆனந்தம் அடைவார் இளையராஜா. இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன் போன்றோர் இளையராஜாவின் தேவை கருதி பொறுத்துப் போகிறார்கள். தனக்கு அப்படி பொறுத்துப்போக வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறார் வைரமுத்து.
இந்நிலையில், பாடல்கள் காப்பிரைட் வழக்கில், பாடல்களின் உரிமை தனக்கே என்று இளையராஜா கேட்கிறாரே. இதில் பாடலாசியருக்கு உரிமை இல்லையா? என்று நீதிபதி கேட்டதற்கு, இசைதான் முக்கியம். இசையமைப் பாளருக்குத்தான் உரிமை என்று இளையராஜா தரப்பு சொன்னது வைரமுத்துவை உசுப்பேத்தி விட்டிருக்கிறது.
அதனால்தான் அவர் திரைவிழா ஒன்றில் பங்கேற்றுப்பேசும்போது, இசை பெரிதா? மொழி பெரிதா? என்ற பேதம் வேண்டாம். இரண்டுமே பெரிதுதான். இதை புரிந்துகொள்பவன் ஞானி. புரியாதவன் அஞ்ஞானி என்று சொல்லப்போக, அதாவது, ’’சில நேரங்களில் இசையை விட மொழி உயர்ந்ததாகவும், சில நேரங்களில் மொழியை விட இசை உயர்ந்ததாகவும் திகழ்கிற சந்தர்ப்பங்கள் உண்டு. இதை புரிந்துகொள்பவன் ஞானி; புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி’’ என்று சொல்லப்போக, இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் அதை பிடித்துக்கொண்டு, அதே நேரம் கருத்துக்கு கருத்து என்கிற ரீதியில் போகாமல், வைரமுத்துவுக்கு மிரட்டல் தொணியில் எச்சரிக்கை விடுத்ததால், ’’இனி பேசினால் நாக்கை புடுங்கிக்கொள்கிற மாதிரி கேட்டுவிடுவேன். அந்த மகானை ஒரு தவறான வார்த்தையில் கூட திட்டக்கூடாது என்று அறிவிக்கிறேன்.’’ என்று சொன்னதால், பாஜக பின்புலத்தில் இருப்பதால்தான் இந்த அளவிற்கு தைரியம் வந்திருக்கிறது கங்கை அமரனுக்கு என்று அவரைப்போட்டு வறுத்தெடுத்து வருகிறார்கள்.
அன்று, ‘’இது ஒரு பொன்மாலை பாடல் வரிகளைப் படித்துவிட்டு, ச்சே.. இதெல்லாம் ஒரு பாட்டா என்று கிழித்து போட்டிருந்தால் இன்று வைரமுத்து இல்லை’’ என்கிறார் கங்கை அமரன். அதே போன்றுதான் அன்று, இதெல்லாம் ஒரு இசையா என்று பஞ்சு அருணாசலம் நினைத்திருந்தாலோ, இசைக்கோர்ப்பு பணிகளின் முதல் நாள் பணி துவங்கும்போதே பவர் கட் ஆன போது, ’’முடிஞ்சுச்சு’’ என்று எல்லோரும் சொன்னது போலவே பஞ்சு அருணாசலமும் சொல்லாமல், இளையராஜாவின் கண்ணீரை உணர்ந்து, அவரது திறமையை உணர்ந்து பவர் வந்ததும் தொடர்ந்து இசைப்பதிவை நடத்தாமல் இருந்திருந்தால் இன்று இளையராஜா இல்லை என்று சொல்லிவிட முடியுமா? இது எந்த அளவுக்கு அபத்தமோ அப்படித்தான் கங்கை அமரன் சொல்லுவதும் அபத்தமாக இருக்கிறது.
கங்கை அமரனின் பேச்சு வைரமுத்துவுக்கு ஆதரவாக பலரை பேச வைத்திருக்கிறது. தனக்கு ஆதரவுக்குரல்கள் இப்படி ஆர்ப்பரிக்கும்போது அமைதியாக இருந்த வைரமுத்து,
’’குயில்
கூவத் தொடங்கிவிட்டால்
காடு தன் உரையாடலை
நிறுத்திக்கொள்ள வேண்டும்
புயல்
வீசத் தொடங்கிவிட்டால்
ஜன்னல் தன் வாயை
மூடிக்கொள்ள வேண்டும்
வெள்ளம்
படையெடுக்கத் தொடங்கிவிட்டால்
நாணல் நதிக்கரையில்
தலைசாய்த்துக்கொள்ள வேண்டும்
மக்கள்
தனக்காகப்
பேசத் தொடங்கிவிட்டால்
கவிஞன் தன் குரலைத்
தணித்துக்கொள்ள வேண்டும்
அதுதான்
நடந்து கொண்டிருக்கிறது’’ என்று தனது அமைதிக்கான காரணத்தை சொல்லி இருக்கிறார்.
பாடல்களால் இளையராஜா -வைரமுத்து அலைகள் 38 ஆண்டுகளாக ஓயாமல் இருப்பது போலவே, சர்ச்சைகளாலும் இவர்களைப் பற்றிய அலைகள் ஓயப்போவதில்லை.
வைரமுத்துவுக்கு முதல் வாய்ப்பு கொடுத்தவர் இளையராஜா என்பதால், அவர்தான் வைரமுத்துவை வளர்த்துவிட்டவர் என்று கங்கை அமரன் ஏளனம் செய்ததால்,
’’உண்மையில் வைரமுத்து அவர்களை வளர்த்தது இளையராஜா அவர்கள்தான். வைரமுத்து அவர்கள் மீதான கோபத்தில் யாரையும் கவித்துவமாக எழுத விடாமல் 20 வருடம் தான் போட்ட நல்ல டியுன்களுக்கு நிறைய Dummy lyrics ஓகே பண்ணி அய்யா வைரமுத்துவை மேலும் ஜொலிக்க விட்டவர் இளையராஜா அவர்கள்’’ என்கிறார் இயக்குநர் சீனுராமசாமி.
இதற்கு நடிகை கஸ்தூரி, ‘’வைரமுத்துவுக்கு முன்னும் பின்னும் இசைஞானி இளையராஜாவின் மெட்டுக்களுக்கு பாட்டெழுதி ஹிட்டடித்த பெரும் திறமைசாலிகளை எதற்கு குறைத்து பேச வேண்டும்? சீனுராமசாமியின் இந்த பதிவு மிகவும் வருத்ததுக்குரியது, தேவையற்றது .’’ என்கிறார்.