தொழிலதிபர்கள் அதானியும் அம்பானியும் டெம்போக்கள் மூலம் கறுப்பணத்தை ராகுல்காந்திக்கு கொடுத்துள்ளனர் என்று பிரதமர் பகீர் குற்றச்சாட்டினை முன்வைக்க, அதானி, அம்பானியிடம் டெம்போவில் பணம் வாங்கித்தான் மோடிக்கு பழக்கமா? காட்டமான பதிலடி கொடுத்துள்ளார் ராகுல்காந்தி.
மக்களவை தேர்தல் பிரச்சாரங்களில் பிரதமர் மோடி பேசி வருவது அனைத்துமே அதிர்ச்சி அளிக்கின்றன, பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றன.
அந்த வகையில்தான், தெலுங்கானாவில் வேமுலாவாடாவில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசும்போது, ‘’கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒன்றிய அரசுக்கும் அதானி, அம்பானிக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று பேசிவந்த ராகுல்காந்தி, திடீரென்று அம்பானி, அதானியை விமர்சிப்பதை நிறுத்திக்கொண்டிருக்கிறார். தெலுங்கானா மண்ணில் இருந்து இந்த கேள்வியை எழுப்புகிறேன்..ஏன்?’’ என்று கேட்ட மோடி, ‘’இந்த இரண்டு தொழிலதிபர்களிடம் இருந்தும் ராகுல்காந்தி எவ்வளவு பணம் பெற்றிருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறேன். எனக்குத்தெரிந்து, டெம்போக்கள் மூலம் அதானி, அம்பானியிடம் இருந்து காங்கிரசுக்கு பணம் வருகிறது. அதானி, அம்பானிக்கும் காங்கிரசுக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் எவ்வளவு கறுப்பணம் வாங்கினீர்கள் என்று நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும்’’ என்று சொன்னபோது மக்கள் விழித்தனர்.
கறுப்பு பணத்தை ஒழித்துவிட்டதாக சொல்லும் மோடி, அதானியிடமும் அம்பானியிடமும் கறுப்பு பணம் இருப்பதாக சொல்லுவது அபத்தமாக இருக்கிறது என்றும், மோடியின் நண்பர் அதானி என்பது ஊரறிந்த விசயம் என்பதும் தெரிந்தும், ராகுலுடன் அதானி ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளார் என்று சொல்லுவது சிறுபிள்ளைத்தனமானது என்று அரசியல் விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அதானி – அம்பானி – மோடியை குறிப்பிட்டு ராகுல்காந்தி பேசின வீடியோக்களி கடந்த ஒருவாரமாக அதிகம் வெளியிட்டு வருகிறோம். சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது. நிலைமை இவ்வாறு இருக்க பிரதமர் இப்படி பேசுவது வேடிக்கையாக உள்ளது என்கிறது காங்கிரஸ்.
’’பிரதமர் நாற்காலி ஆட்டம் கண்டுவிட்டது. அதன் சமிக்ஞைதான் தனக்கு நெருக்கமான நண்பர்களையே தாக்கி மோடி பேசி வருகிறார்’’ என்கிறார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே.
அதானியும் அம்பானியும் டெம்போக்கள் மூலம் கறுப்பணத்தை ராகுல்காந்திக்கு கொடுத்துள்ளனர் என்று மோடியின் குற்றச்சாட்டுக்கு, அதானி, அம்பானியிடம் டெம்போவில் பணம் வாங்கித்தான் மோடிக்கு பழக்கமா? என்று பதிலடி கொடுத்துள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி.
அவர் மேலும், ‘’அதானியும் அம்பானியும் டெம்போக்களில் பணம் தருகிறார்கள் என்பது மோடிக்குத்தான் தெரியும்’’ என்றவர், ‘’காங்கிரஸ் அளித்த வாக்குறுதிப்படி அதானி, அம்பானிக்கு மோடி அளித்த பணத்தை பல்வேறு திட்டங்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை’’ என்று அதிரடி காட்டியிருக்கிறார்.