தன்னிடம் பாலியில் சில்மிஷம் செய்த ஆளுநர் ஆனந்த போஸ், தன் முகத்தை மறைக்காமல் வீடுயோவை வெளியிட்டு தன்னை களங்கப்படுத்தி விட்டார் என்று பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்து பரபரப்பை கூட்டியிருக்கிறார்.
மேற்கு வங்க ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்த தற்காலிக பெண் ஊழியர் ஒருவர், ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் தன்னிடம் பாலியல் சில்மிஷம் செய்ததாக குற்றம்சாட்டி அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.
இது தொடர்பாக கொல்கத்தா ஹரே தெரு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தார். இந்தப்புகாரின் பேரில் கொல்கத்தா ஹரே தெரு காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் 4 ஊழியர்களுக்கு சிறப்பு புலனாய்வுக்குழு சம்மன் அனுப்பியது.
ஆளுநர் ஆனந்தபோஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டினை விசாரிக்க 8 பேர் கொண்ட குழுவினையும் கொல்கத்தா போலீசார் அமைத்தனர். இந்த சிறப்பு விசாரணைக் குழுவினர், பெண் அளித்த புகாரினை உறுதிப்படுத்த, ஆளுநர் மாளிகையின் சிசிடிவி பதிவுகளை கேட்டிருந்தது. ஆனால் ஆளுநரோ, காவல்துறைக்கு எந்த வீடியோவும் அனுப்ப வேண்டாம். பொதுமக்கள் கேட்டால் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கலாம் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்ததாக தகவல் பரவியது.
தன் மீதான இந்த குற்றச்சாட்டு திட்டமிட்ட அரசியல் சதி. மம்தா பானர்ஜிதான் திட்டமிட்டு இதைச்செய்கிறார் என்று ஆளுநர் ஆனந்த போஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ்க்கும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. தேர்தலுக்கு பிறகான வன்முறை விவகாரங்களில் சட்டம் ஒழுங்கினை சுட்டிக்காட்டி திரிணாமுல் அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார் ஆனந்த போஸ். இந்நிலையில் அவர் மீது பாலியல் புகார் எழுந்ததால் அவர் மம்தாதான் இதற்கு காரணம் என்று ஆரம்பம் முதற்கொண்டே குற்றம்சாட்டி வருகிறார்.
ஆளுநர் ஆனந்த போஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கின் விசாரணை விபரங்களை ஊடகங்கள் வெளியிட்டு வரும் நிலையில், விசாரணை விபரங்களை தடை விதிக்க வேண்டும். விசாரணை விபரங்களை வெளியிட்டால் ஆளுநர் மாளிகைக்கு களங்கம் ஏற்படும் என்று ஆளுநர் மாளிகை கறார் காட்டி வந்த நிலையில், விசாரணை விபரங்களை வெளியிட தடைவிதிக்க முடியாது என்று அதிரடி காட்டியது கொல்கத்தா உயர்நீதிமன்றம்.
இந்த நிலையில், பொதுமக்கள் 92 பேர், பெண் புகார் கூறியதை உறுதிப்படுத்த, சிசிடிவி காட்சிப்பதிவுகளை பார்க்க வேண்டும் என்று மின்னஞ்சல் மூலம் விருப்பம் தெரிவிக்க, அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், 92 பேரில் சிலர் மட்டுமே வந்திருக்கிறார்கள்.
ஏப்ரல் 24 மற்றும் மே 2 ஆகிய தேதிகளில் ஆளுநர் ஆனந்த போஸ் தன்னிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார் என்று பெண் புகார் கூறியிருந்த நிலையில், மே 2 அன்று ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தி இருக்கிறார் ஆளுநர்.
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில், நீல நிற ஜீன்ஸ் மற்றும் மேலாடை அணிந்த பெண், போலீஸ் அவுட்போஸ்ட்டுக்குச் செல்வது போன்ற ஒரு மணி நேரத்துக்கும் மேலான இந்தக் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்திற்கு காரணமே மம்தாபானர்ஜிதான். அவரின் திட்டமிட்ட சதிதான் இந்த பாலியல் புகார் என்று ஆனந்த போஸ் நினைப்பதால், அதனால் மம்தாவின் ஆட்சியின் போலீசாரிடம் வீடியோவை காட்ட விரும்பாமல், பொதுமக்களிடம் காட்ட விரும்பி உள்ளார் ஆனந்த போஸ். சட்டத்திற்கு முன்பாக பொதுமக்கள் இந்த வீடியோவை பார்த்து அவர்களே தீர்ப்பு வழங்க வேண்டும் என்று ஆளுநர் நினைத்து பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தி உள்ளார்.
அந்த வீடியோ காட்சிகளைப்பார்த்த பலர், எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று கூறியதாக தெரிவித்துள்ளது ஆளுநர் மாளிகை. ஆனால், ஆளுநர் மாளிகை சிசிடிவி காட்சி பதிவுகளை வெளியிட்ட விவகாரத்தில் மீண்டும் புகார் அளித்திருக்கிறார் பாதிக்கப்பட்ட பெண்.
பாலியல் புகார் கூறிய பெண்ணின் முகத்தை மறைக்காமல் வீடியோ காட்சிகள் வெளியிட்டுள்ளதால், தனது கண்ணியத்தை கெடுக்கும் வகையில், சட்டவிரோதமாக தன்னை மீண்டும் களங்கப்படுத்தி இருக்கிறார் ஆளுநர் புகார் தெரிவித்திருக்கிறார்.
பாதிக்கப்பட்ட பெண் ஆளுநர் ஆனந்த போஸ் மீது அடுத்தடுத்து அளித்து வரும் புகார்களால் அதிர்ந்து நிற்கிறது மேற்கு வங்கம்.