27 ஆண்டுகளுக்கு பின்னர் முடிவுக்கு வந்திருக்கிறது நடிகர் கவுண்டமணியின் நில பிரச்சனை. நிலத்தை கவுண்டமணியிடமே ஒப்படைக்க ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் கட்டுமான நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் ராம் தியேட்டர்( தற்போது திருமண மண்டபம்) அருகே ஒரு வணிக வளாகம் பாதி கட்டப்பட்டு பாழடைந்த நிலையில் உள்ளது. அது நடிகர் கவுண்டமணிக்கு சொந்தமானது.
90களில் உச்சத்தில் இருந்தார் கவுண்டமணி. முன்னணி நடிகர்களுக்கு இணையாக அவர் சம்பளம் வாங்கி வந்தார். அந்த சமயத்தில் நளினி பாய் என்பவருக்கு சொந்தமான 5 கிரவுண்ட் 454 சதுர அடி நிலத்தை வாங்கி இருந்தார் கவுண்டமணி.
1996ஆம் ஆண்டில் அந்த இடத்தில் வணிக வளாகம் கட்ட நினைத்தார் கவுண்டமணி. இதற்காக, ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் என்கிற நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டுள்ளார் கவுண்டமணி. 22,700 சதுரடி பரப்பளவில் வணிக வளாகத்தை 15 மாதங்களில் கட்டித்தர வேண்டும் என்று அந்த ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. கட்டுமான பணிகளுக்காகவும், ஒப்பந்ததாரர் கட்டணமாகவும் ரூ.3 கோடி 58 லட்சம் ஒப்பந்தம் போடப்பட்டு 1996 முதல் 1999 வரையிலும் 1 கோடியே 4 லட்சம் ரூபாய் வழங்கி இருக்கிறார் கவுண்டமணி.
ஆனாலும், 2003 ஆம் ஆண்டு வரையிலும் வணிக வளாக கட்டு மானப்பணிகள் முழுமையடையாமல் இருந்துள்ளன. இதில் ஏற்பட்ட பிரச்சனையில் கட்டுமானப்பணிகள் அதற்கு மேல் நடக்காமல் இருந்துள்ளன. கட்டுமானமே வேண்டாம் நிலத்திஇதில் ஆத்திரமடைந்த கவுண்டமணி, 2006ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உத்தரவின் படி, நடந்த ஆய்வில், 46 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய்க்கான பணிகள் மட்டுமே நடந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கடந்த 2019ம் ஆண்டில், நடிகர் கவுண்டமணியின் நிலத்தை அவரிடமே ஒப்படைக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதற்கொண்டு மாதம் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் கவுண்டமணிக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் கட்டுமான நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து 2021ல் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது கட்டுமான நிறுவனம். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு, தனி நீதிபதியின் தீர்ப்பை உறுதி செய்தது. இதன் பின்னர் உயநீதிமன்ற தீர்ப்பினை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது கட்டுமான நிறுவனம்.
நேற்று மீண்டும் இந்த மனு மீது விசாரணை நடந்தது. அப்போது இந்த மனுவை விசாரித் உச்சநீதிமன்றம், ஒப்பந்தத்தின் படி குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டிடத்தை கட்டிக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் விதிகளை மீறி இருப்பதால், உயர்நீதிமன்ற தனி நீதிபதி மற்றும் டிவிஷன் அமர்வு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. அதுமட்டுமல்லாமல், கவுண்டமணிக்கு எதிராக கட்டுமான நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, கவுண்டமணிக்கு சொந்தமான அவரது நிலத்தை அவரிடமே திருப்பி ஒப்படைத்துவிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.