சமைத்துக்கொடுக்க நான் தயார். அதை சாப்பிட மோடி தயாரா? என்று கேட்டு உணவு அரசியலுக்கு குட்டு வைத்திருக்கிறார் மம்தா.
ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் கடந்த ஏப்ரல் மாதத்தில் பிரச்சாரத்திற்காக ஹெலிகாப்டரில் சென்றபோது, கூட்டணி கட்சியான விஐபி தலைவரான முகேஷ் சஹானியுடன், பிரச்சாரத்துக்கு செல்லும் பயணத்தின் போது 10-15 நிமிட இடைவெளியில் ‘செக்ரா’ மீன் மற்றும் ரொட்டி சாப்பிடும் வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், நவராத்திரியில் மீன் சாப்பிடும் வீடியோவை காட்டுவதன் மூலம் நீங்கள் ஏமாற்று அரசியலில் ஈடுபடுகிறீர்கள் என்று பாஜகவினர் கடுமையாக விமர்சித்தனர்.
இந்துக்கள் விரதம் இருக்கின்ற மாதத்தில் மாமிச உணவை சாப்பிட்டு அவமதிக்கிறார் ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் என்று சொல்லி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார் பிரதமர் மோடி.
மோடியின் இந்த உணவு அரசியலை இன்னமும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் மோடியின் இந்த உணவு அரசியலுக்கு குட்டு வைத்திருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
மேற்கு வங்காளத்தில் பராக்பூர் நகரில் நடந்த மக்களவைத்தேர்தல் பிரச்சாரத்தில் அவர் பேசியபோது, ‘’இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது . கலாச்சாரங்கள், மாறுபட்ட பழக்க வழக்கங்கள், வேறுபட்ட மொழிகளைக்கொண்டது. அதனால், சைவை உணவை விரும்பினால் காய்கறிகளை சாப்பிடலாம். அசைவ உணவை விரும்பினால் மாமிசத்தை சாப்பிடலாம். அது அவரவர் உரிமை. எந்த உணவை விரும்புகிறார்களோ, எப்போது விரும்புகிறார்களோ அவரவர் அப்போது சாப்பிடலாம்’’ என்று சொல்லி மோடிக்கு குட்டு வைத்திருக்கிறார்.
அவர் மேலும், ‘’பல மாநிலங்களின் உணவு வகைகளை நான் சாப்பிட்டு இருக்கிறேன். என்னைப்பொறுத்த வரையிலுல் இதில் எந்த பாகுபாடும் கிடையாது. சின்ன வயதில் இருந்தே எனக்கு சமைக்கத்தெரியும்’’ என்றவர், ’’பிரதமர் மோடி விரும்பினால் அவருக்கு சமைத்து கொடுக்க நான் தயார். ஆனால், நான் சமைத்து கொடுப்பதை அவர் சாப்பிடுவாரா? என்ற கேள்வியை எழுப்பி சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.